The night of the 12 th (2022 ) ஃப்ரெஞ்சு திரைப்படம் 20 ஆவது சென்னை திரைப்பட திருவிழாவில் பார்த்தேன், மனதை கனமாக்கி பெண் ஜென்மம் பற்றி பல கேள்விகளை மனதில் எழுப்பிய படைப்பு இது.
படத்தின் துவக்கத்திலேயே கதையின் அடிக்குறிப்பு இப்படி காட்டப்படுகிறது.
“Each year, the French police conduct more than 800 murder investigations,” we’re told. “Twenty per cent remain unsolved – this film relates to one of those.”
ஃப்ரான்ஸின் ஆல்பைன் மலை பின்னணியில் Grenoble என்ற அழகிய நகரில் நடக்கும் கதை இது,
க்ளாரா 21 வயது அழகிய இளம்பெண், இசையில் ஆர்வமிக்கவள், தோழமைக்கு மதிப்பளிப்பவள், பெற்றோருக்கு மதிப்பளிப்பவள் ,கல்லூரி இளங்கலை முடித்தவள், அன்று தோழி வீட்டிற்கு தோழியின் பிறந்தநாள் விருந்துக்கு போய்விட்டு வருகிறேன் என சொல்லிச் சென்றவள்,விருந்தில் நிலை கொள்ளாமல் இரவே வீட்டுக்கு கிளம்பி வரும் வழியில் முகமூடி அணிந்த ஒருவன் அவள் பெயர் சொல்லி அழைத்து முன்னால் வருகிறான், இவளுக்கு குரல் பரீட்சயத்தால் ஆர்வமாகி நின்றவளின் முகத்தில் உடம்பில் cleaning spirit சடுதியில் ஊற்றுகிறான், திகைக்கிற அந்த அந்த சிறு நொடியில் லைட்டர் கொண்டு எரியூட்டப்பட்டு , துடிதுடித்து புல்வெளியில் எரிந்தபடி ஓடி விழுந்து சுருண்டு இறந்து போகிறாள் க்ளாரா.
போலீஸ் புலன் விசாரணை துவங்குகிறது, அவளின் பெற்றோரிடம் மகளின் மரண செய்தியை இரு புலனாய்வு அதிகாரிகள் சொல்லும் தருணத்தில் இருந்தே அத்தனை நம்பகத்தன்மை நம்மை தொற்றிக் கொள்கிறது, க்ளாராவின் பெற்றோர் தோழி என க்ளாராவின் சுற்றம் நட்பில் இருந்த ஒவ்வொருவராக விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து விசாரிக்கப்படுகின்றனர்.
விசாரணை அதிகாரி விவ்ஸ் இளம் அதிகாரி ,இன்னொருவர் மார்சியோ 55 வயது, இந்த இருவர் கிளாராவின் கொலைக்கு பின்னணியில் காதல் உள்ளதா என்பது பற்றி விசாரணையை முடுக்கி ஆழப்படுத்துகின்றனர்,
ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக அடுத்தடுத்து க்ளாராவின் காதலர்களை ஒன்றன் பின் ஒன்றாக சந்திக்கிறார்கள்,
முதலில் வெஸ்லி என்பவனை விசாரிக்கையில் தனக்கு ஏற்கனவே ஒரு காதலி இருப்பதாகவும், இளம் கிளாராவால் கிளர்ச்சியைப் பெறுவதற்கு வேண்டி மட்டும் தன்னை காதலியே தன்னை அனுமதித்ததாகவும் கூறுகிறான், உங்களுக்கு வேண்டுமானால் என்னை பாலிகிராஃப் சோதனை நடத்தி நான் பொய் சொல்கிறேன் என நிரூபியுங்கள் என்கிறான்.
அடுத்ததாக ஜூல்ஸ் என்பவனை சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரிக்கையில் அவனும் க்ளாராவுடன் உடல் ரீதியாக பலமுறை தொடர்பில் இருந்ததைச் சொல்கிறான், இவர்கள் இருவர் இந்த கோர கொலையைப் பற்றி விசாரிக்கையில் ஜூல்ஸ் மனதில் ஒரு பழைய நகைச்சுவை ஏனோ நினைவு வர இருமுறைக்கு மேல் குபீரென அங்கே சிரிக்கிறான், க்ளாரா கொடூரமாக இறந்ததற்கு துளி கூட வருந்தவில்லை அவன் , விசாரணைக்கு உதவுவதற்கு சிறு துப்பு கூட தரவுமில்லை ,
அடுத்ததாக gabby என்பவனை விசாரிக்கின்றனர், கிளாரா அவனைப் பிரிந்த பிறகு ஒரு வன்முறையான ராப் பாடலை எழுதி யூட்யூபில் வெளியுட்டிருக்கிறான் gabby,
க்ளாரா எரிக்கப்படுவதற்கு முழுத் தகுதியானவள் என்றும் இவர்களிடம் கூறுகிறான், gabby ன் rap பாடலை பாடிக்காட்டச் சொல்லி கேட்க,அவன் ஒத்து இசை இன்றி தனக்கு பாடவராது என்கிறான், அவனை மிரட்டி பாட சொல்ல , அவன் பாட அதிர்கின்றனர்,அடிடா அவள, வெட்ரா அவள பாடலை விட வன்முறையாக உள்ளது அப்பாடல்.
இசையை உபயோகித்து இத்தனை குரூரமாக ஒரு பெண்ணை எரிக்க வேண்டும் என ஒருவன் பாட முடியும் என அறிய வருகையில் இரு அதிகாரிகளும் அங்கு செய்வதறியாமல் திகைக்கின்றனர்.
இவர்களுக்கு தபாலில் ஒரு சிகரட் லைட்டர் வருகிறது, அது க்ளாராவை எரிக்கப்பயன்படுத்திய லைட்டர் என்று எழுதியிருக்கிறது,
இவர்களின் விசாரணை வளையத்தில் டேனியல் என்ற குடிகேடி bum ஒருவன் வலிய சிக்குகிறான் , தாரித்ரிமிகுந்த சிறு குடிசையில் வசிக்கிறவன், இவனும் கூட க்ளாரா தன் காதலி ,அவளுடன் உடல் ரீதியான தொடர்பில் பலமுறை இருந்ததாக சொல்கிறான்,க்ளாரா தன்னைப் புறக்கணித்து விட்டு வின்சென்ட் என்ற மணமானவனுடன் உறவு வைத்திருந்ததாக குற்றம் சொல்கிறான்.
வின்சென்ட் மகா முரடன் இப்போது புது மனைவியுடன் வாழ்கிறவன், அவனது முன்னாள் மனைவியை அடித்து முகத்தை சிதைத்த குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்று வெளியே வந்தவன், ஒரு ஆணவமும் தினவுமுள்ள சமூகவிரோதி,அவன் கூட க்ளாராவுடன் பல முறை உடல் தொடர்பில் இருந்ததாகச் சொல்கிறான், அவளுக்கு bdsm பாணி முரட்டுக் கலவி பிடித்ததால் தன்னுடன் காதலில் இருந்தாள் என்கிறான்,அவன் வீட்டை சோதனை இடுகையில் அவன் புது மனைவி வீட்டில் கறைகளை போக்க உபயோகிக்கும் cleaning spirit பெரிய can ல் பெரும்பகுதி தீர்ந்த நிலையில் கைப்பற்றப்படுகிறது ,
ஆனாலும் இந்த இரு அதிகாரிகளால் இவர்கள் குற்றம் செய்ததை தெளிவுகளுடன் நிரூபிக்க முடியவில்லை.
பொருத்தமற்ற பல உறவுகள் கொண்ட பெண்ணை வகைப்படுத்த பிரெஞ்சு மொழியில் சொல் கூட உள்ளதா? என்று இந்த இரு விசாரணை அதிகாரிகள் ஆச்சர்யப்படுகின்றனர்.
இந்த குடிகேடி ஆண்கள் கதாபாத்திரங்களை நாம் திகிலுடனும் அவநம்பிக்கையுடன் ஒவ்வொருவராக சந்திக்கிறோம், இவர்களை அடித்து விசாரித்தால் என்ன என்று கூட ஆசைப்படுகிறோம்.
அதிகாரிகள் விவ்ஸ் மற்றும் மார்சியோ மனதில் இந்த வழக்கு விசாரணையில் எதிரொலிக்கும் உணர்வுகள் நம்மையும் அழுந்தத் தொற்றிக் கொள்கிறது, இருக்கை நுனிக்கு நகர்த்துகின்றன விசாரணை காட்சிகள்,
ஆனால் எதுவுமே ருசுவாவதில்லை. வல்லரசு நாடான ஃப்ரான்ஸின் சிற்றூரைச் சேர்ந்த இந்த நவநாகரீக இளைஞர்கள் பெண்களுக்கு எதிராக இத்தகைய இழிவான சுயநலமான மிருகத்தனமான அணுகுமுறைகளை எவ்வாறு வளர்த்துக் கொண்டனர்?
எனக் குழம்புகின்றனர்.
க்ளாரா அன்று கொல்லப்பட்ட இரவு பிறந்த நாள் விருந்து நடத்திய நத்தாலியும் விவ்ஸும் ஒரு உணவு மேஜையில் விவாதிக்கும் அற்புதமான காட்சி உண்டு.
எதனால் க்ளாராவுக்கு இத்தனை காதல்கள்? அவளுக்கு இத்தனை பேருடன் உடல் ரீதியான தொடர்பு இருந்ததை நீ அறிவாயா? என கேட்டது தான் தாமதம், நத்தாலி சொல்கிறாள்,க்ளாராவை விபச்சாரியாக வகைப்படுத்துவதை நிறுத்துங்கள், அவள் அழகிய உள்ளம் கொண்டவள், நட்பை அப்படி கொண்டாடுபவள், அவள் செய்த தவறு என்ன தெரியுமா? அவள் உண்மையான தகுதியான காதலனை கண்டறியாமல் இது போல குடிகேடிகளை நம்பி விழுந்தது தான், அவளது நண்பர்களில் ஒருவர் திருப்பி அடித்தார். “உங்களுக்கு அவள் எதற்காக கொல்லப்பட்டாள் என்பதை அறிய வேண்டுமா?நான் சொல்கிறேன், ஏனென்றால் அவள் ஒரு பெண்."என பொட்டில் அடித்தது போல பதிலுரைக்கிறாள்.
கிளாராவின் காதலர்கள் அனைவருக்கும் கடுமையான மனவிகாரநிலையைத் தவிர பொதுவான அம்சம் எதுவும் இல்லை என்பதையும் நாம் கண்ணுறுகிறோம்.
ஒரு விசாரணை மற்றொரு விசாரணையை பின்தொடர்கையில், இரு புலன் விசாரணை அதிகாரிகளும் தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்பு வாழ்வில் எதிலும் பற்றற்ற உணர்வு அதிகரிப்பதையும் உணர்கிறார்கள், இப்படியே மூன்று வருடங்கள் கழிகிறது .
இறுதியில் இந்த க்ளாரா கொலை வழக்கு இரு அதிகாரிகளின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது.
அதிகாரி விவ்ஸ் திருமணமாகாதவர், அவருக்கு இந்த க்ளாராவின் காதலர்கள் தந்த அனுபவத்தால் எந்த பெண்ணையும் பார்க்கவேண்டும் பழக வேண்டும் என்றே தோன்றுவதில்லை,அவர் அழகிய நேர்த்தியான குடியிருப்பில் வசிக்கிறார், காவல் துறையில் சக அதிகாரிகள் கூட பெண் ஜென்மங்கள் மீது வைக்கும் கசப்பான கேவலமான மதிப்பீடுகள் இவரை மேலும் கோபப்படுத்துகின்றன,
அதனால் அவர்களுடன் இவருக்கு அவர்களுடன் எந்த முகாந்திரமும் நட்பும் இருப்பதில்லை.
ஓய்வு பெற மூன்று வருடங்கள் மீதமிருக்கும் விசாரணை அதிகாரி மார்சியோவின் மனைவி அவரை விவாகரத்து செய்ய விழைகிறாள், மார்சியோ மன அழுத்தம் பதட்டம் காரணமாக இந்த க்ளாரா கொலை வழக்கு முடியும் முன்னரே வேலையை ராஜினாமா செய்யும் நிலைக்கு
தள்ளப்படுகிறார்,அதன் முன் சிலகாலம் தன் சக அதிகாரி விவ்ஸ்ஸின் அழகிய அடுக்கக வீட்டில் வந்து தங்குகிறார் .
விவ்ஸ் OCD வந்தவர் போல ஒரு கட்டாய ஒழுங்கை கொண்டவர், தினம் இரவில் தவறாமல் சைக்கிள் ஓட்டுபவர், அவர் ஒரு தனிமை விரும்பி ஆதலால் Velodrome என்று அழைக்கப்படும் cycle track ஐச் சுற்றிச்சுற்றி வழக்கமாக அதிவேகமாக சைக்கிள் ஓட்டுகிறார்,
மார்சியோ இந்த வட்டத்துக்குள் சைக்கிள் ஓட்டுவதை மாற்றிக்கொள் என அறிவுருத்துகிறார், இது வட்டங்களுக்குள் உன் சிந்தனையை சிக்க வைக்கும், உன் விசாரணையும் கூட பரந்து விரிவடையாமல் வட்டத்துக்குள்ளேயே சுற்றலில் விடும் என்கிறார் .
விவ்ஸ் மார்சியோவை தன் அறையில் தங்க அனுமதிக்கையில் மார்சியோ கண்டிப்பாக கழிப்பறை கோப்பைக்குள்ளே மட்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் , rim ல் சிந்தக்கூடாது எனக்கு அது பிடிக்காது, நான் சிறுநீர் கழிக்கையில் இதற்காகவே அமர்ந்த நிலையில் தான் சிறுநீர் கழிப்பேன் என்கிறார் விவ்ஸ்.
மார்சியோ சிறுசிறு சந்தோஷங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர் அநீதிக்கு உணர்ச்சிவசப்பட்டு கொந்தளிக்கிறவர், அவர் அறையில் Verlaine கவிதைகளை விவ்ஸுக்கு மேற்கோள் காட்டுகிறார்,
தான் ஒரு போலீஸ் அதிகாரியாக இருப்பதை விட பிரெஞ்சு பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருந்திருக்கலாமோ என உணர்கிறேன் என்று விவ்ஸிடம் பகிர்கிறார்.
இந்த இருவர் விசாரணை செய்யும் க்ளாராவின் காதலர்களின் சேஷ்டைகள் மாறுபட்ட அணுகுமுறைகள் அவரை கோபத்துக்காளாக்குகின்றன.
"What we do is a different kind of work,"," என்று அவர் தனது சகா ரிவ்ஸிடம் அழுத்தமாக கூறுகிறார்,
ஆனால் விசித்திர தன்மையுடன் துவங்கிய இந்த வழக்கு அதிர்ச்சிகரமானதாக மாறுகிறது..
கதையின் போக்கின் ஊடே சாதாரண மனிதர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் விஷயங்களைக் கண்டு நாம் கொதிக்கிறோம்.
இந்த காதலர்களிடம் பெண் வெறுப்பு மண்டிக்கிடக்கிறது, இவர்களுக்கு தேவையில்லை என்றால் அந்த பெண்ணை துச்சமாக ஒரு சதைப்பிண்டமாக கருதுகின்றனர் இந்த ஆண்கள், அந்தப் பெண் க்ளாரா இவர்களை புறக்கணிக்கையில் அத்தனை கோபப்படுகின்றனர், க்ளாராவின் நடத்தையை அந்த ஆண்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல சாடுகின்றனர்.
க்ளாரா தன் காதலனுடனான உறவை பேணியதற்கும் நிராகரித்ததற்கும் பாலியல் ரீதியான காரணங்களைத் தவிர வேறு காரணங்களும் கூட இருக்கலாம் என்பது அவர்களுக்கு இறுதி வரை உரைக்கவே இல்லை.
க்ளாரா உண்மையான உறவின் ஆழ்ந்த தேடலில் முன்னாள் காதலனுடன் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்ததால் அந்த முன்னாள் காதலர்கள் கடுமையாக கோபப்பட்டதை இவர்கள் உணர்கிறார்கள்.
இது ஆண் என்ற செருக்கு மற்றும் கவலையின் நிலையற்ற கலவை என அறிகிறார்கள்.
இந்த குடிகேடி ஆண்களுக்கும் க்ளாரா போன்ற பெண்களுக்கும் இடையில் ஏதோ ஒரு மையத்தவறு இருக்கிறது, என்று அவர் காவல்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் பெண் மாஜிஸ்திரேட் நதியாவிடம் கூறுகிறார் விவ்ஸ்.
இந்த க்ளாரா வழக்கு மீண்டும் தூது தட்டப்படுகிறது, க்ளாராவின் மூன்றாம் நினைவு நாளுக்கு க்ளாராவின் கல்லறையில் ரகசிய கேமரா வைக்கப்படுகிறது, இவர்கள் இருவரும் கூட அங்கே கல்லறை வாசலில் ரகசியமாக காத்திருக்கின்றனர், அந்த footage ல் பதிவான காணொளியை ஆராய்கையில் ஒருவன் கல்லறையில் வந்து சட்டையை கழற்றிவிட்டு பாடுகிறான், அவன் பாடுவதை சைகை மொழி விற்பன்னரை வரவழைத்து decode செய்ய, அவர் இது ஆங்கில மொழி சைகை மொழி,எனக்கு ஃப்ரெஞ்ச் சைகை மொழி தான் தெரியும் என்கிறார், இப்போது ஆங்கில மொழி தெரிந்த சைகை மொழி விற்பன்னரை வைத்து அவன் பாடியது என்ன என்று அறிய அவன் ஒரு கவிதையை பாடியுள்ளான், அவளுக்கு ஒட்டுமொத்த ஆண்கள் சார்பில் சட்டை கழற்றி மன்னிப்பும் கேட்டுள்ளான், அவன் மனநிலை மருத்துவமனையில் இருந்து வெளியாகியுள்ளான், அவன் தினசரி செய்தியில் இந்த வழக்கை தொடர்ந்து கவனித்துள்ளான், உள்ளம் கேட்காமல் இங்கு க்ளாராவின் நினைவுதினத்தில் நேரில் வந்து அஞ்சலி செய்திருக்கிறான் என நாம் அறிகையில் விக்கி விதிர்விரிறோம்
இவ்வழக்கு விவ்ஸை ஆட்டிப்படைத்து , ஆண் பெண் உறவுகள் குறித்த விவ்ஸின் பார்வையை நிரந்தரமாக மாற்றிவிடுகிறது.
கிளாராவின் வழக்கு விசாரணை வளையத்தில் வந்த காதலர்களில் ஒருவர் தான் இதுபோன்ற கொடூரமான கொலையைச் செய்தார் என கண்டுபிடிப்பது ஒரு விஷயமேயில்லை,
ஏனென்றால் அவர்கள் அனைவரும் திறமையான குரூரர்கள்,சந்தர்ப்பம் கிடைத்தால் வல்லுறவு செய்வர், சந்தர்ப்பம் கிடைத்தால் க்ளாராவை கொலை செய்திருப்பர், ஒரு மனவிகாரமுள்ள சைக்கோ கொலைகாரனால் க்ளாரா கொல்லப்பட்டாள் என்பதைக் காட்டிலும் அவள் இந்த தினவுள்ள ஆண்களால் கொல்லப்பட்டாள் எனச் சொல்வதே சாலப்பொருத்தமாகும் என்று அதிகாரி விவ்ஸ் நம்பத் துவங்குகிறார்.
பெண்களை இகழ்வது தனிமனித
தாக்குதல் நடத்துவது இங்கே சமூக நெறியாகவே இருக்கையில் கொலையாளியை மட்டும் கொலைவெறி பிடித்தவனாக பிரித்துப் பார்ப்பது கடினம் என்கிறார் விவ்ஸ்.
இறுதிக் கட்டத்தில், விவ்ஸ் பல ஆண்டுகளாக அவரைத் துன்புறுத்திய கொலையில் இருந்து விடுபடத் தொடங்குவதை நாம் பார்க்கிறோம்,
விவ்ஸின் இந்த விட்டு விடுதலையான நிலையும் அவரது மனத்துரத்தல் போலவே மர்மமாக நமக்கு தோன்றுகிறது,அவரது மிடுக்கு தோற்றத்தின் உள்ளே அதுநாள் வரை புரையோடிப் போயிருந்த பயம், வெறுப்பு பாதுகாப்பின்மை மிகச் சாதாரணமான முறையில் அங்கே கலைகிறது.
நமக்கு வியப்பைத் தருகிறது,
விவ்ஸ் தன் முன்னாள் சக அதிகாரி மார்சியாக்கு எழுதும் கடிதம் பின்னணியில் அங்கே வாசிக்கப்படுகிறது, நீங்கள் சொன்ன அறிவுரைப்படி நான் இப்போது velodrome ல் சைக்கிள் ஓட்டுவதை விட்டுவிட்டேன், இப்போது வளைந்து செல்லும் கொண்டை ஊசி மலைச் சாலைகளில் சைக்கிள் ஓட்டுகிறேன் இது என் பார்வையை பரந்து விசாலப்படுத்துகிறது என விவ்ஸ் நமக்கு பகிர்வதுடன் உயரே எழுந்து இப்படம் நிறைகிறது.
வாய்ப்பிருப்பவர்கள் இருமுறையேனும் இந்த திரைப்படத்தை பாருங்கள், ஒரு த்ரில்லர் திரைப்படத்தை இத்தனை gripping ஆக இறுதி முடிவு சுப முடிவில்லாமல் தீர்க்கப்படாத முடிவாக பரீட்சார்த்தமாக இயக்குவது எப்படி என்ற பாடம் இத்திரைப்படத்தில் உள்ளது