எந்த பொருளையும் உபயோகிக்காமல் வைத்தால் அது நைந்து போகும், எலி அல்லது எறும்பு கடித்து வைக்கும் , நாம் வைத்த position சரியில்லை என்றால் கூட பொருள் நாசமாகும் என்பதை கண்ட நாள் இது.
இது எங்கள் திருமணத்துக்கு என் மாமனார் பரிசளித்த பட்டுப்பாய், பெயருக்கேற்ப இது நெகிழும் தன்மை கொண்டது ஆதலால், இதை பரணில் சுருட்டி வைக்கையில் அது முனை மடங்கி இந்த 18 ஆண்டு காலத்தில் முனை நைந்தும் போயிருந்தது , இன்று மனைவிக்கு வேண்டி பரணில் இருந்து tupperware products ஒவ்வொன்றாக இதுவா? இதுவா? எனக்கேட்டு இறக்கித் தருகையில் இந்த தலைதொங்கிய பட்டுப்பாயை பிரித்துப் பார்த்தால் கிழிந்து முனை நைந்து போயிருந்தது,
செட்டிநாடு கிராமங்களின் வீடுகளில் பர்மா பாய் என்று பெரிய பாய் வைத்திருப்பார்கள் ,ரப்பர் போல அத்தனை மிருதுவாக இருக்கும்,விரித்தால் அதுவே உருண்டு ஓடி விரியும், அதில் அசதியானவர்கள் படுத்தால் இரண்டு நாள் கூட தூங்கலாம், முதுகில் தடம் பதியாது, அப்படி மிருதுவாக உறுதியான கோரைபுற்களை வேறெங்கும் பார்க்கவில்லை,இந்த பட்டுப்பாய் அந்த மிருதுவான தன்மையை கொண்டுள்ளது,ஆனால் உறுதியை கொண்டிருக்கவில்லை.
நான் சிறு வயதில் என் கிழிந்து போன துணிகளை நானே லாவகமாக darning செய்யப் படித்திருந்தேன், அதை யாரும் கற்றுத் தரவில்லை என்றாலும் என் மாமாவின் மதுரை தையல் கடைக்கு ஒருவர் வந்து உருப்படி இருக்கிறதா? எனக் கேட்பார், என் மாமா அவரிடம் வந்து சேர்ந்திருந்த சிகரெட் பொசுக்கிய , பிக்பாக்கெட் அடிக்கையில் பர்ஸ் பறிகொடுக்கையில் கிழிந்த வாடிக்கையாளர் உருப்படிகளை எடுத்துத் தருவார்,
அவர் அதே நிற நூலை தேர்வு செய்து மிகச்சிறிய 14-18 நம்பர் darner ஊசி கொண்டு அத்தனை அழகாக அந்த கிழிந்த ஓட்டை விழுந்த உடைகளை புதிது போல சரி செய்வார்,அதைப் பார்க்கவே அத்தனை அழகாக இருக்கும்.
மிகவும் பொறுமை கோருகிற நேரமெடுக்கும் பணி என்பதால் இதற்கு கட்டணம் அதிகம், புதிய சட்டை தைக்கிற கட்டணம் வரும்,அன்றைய லைசன்ஸ் ராஜ் யுகத்தில் ஒவ்வொரு இஸ்திரி கடையிலும் கூட darning செய்யப்படும் என்ற பலகை வைத்திருந்தனர், இன்று அவசர யுகம் darner என்ற கைத்தொழிலே வழக்கொழிந்தும் போய்விட்டது.
முதலில் இந்த பட்டுப்பாயை darning செய்யவே நினைத்தேன், அதைவிட உடனடி தீர்வாக இந்த கைவசமிருந்த mesh tape கொண்டு மேலும் கீழும் ஒட்டி அழகாக சுருட்டி வைத்து விட்டேன்.