இது எந்நேரமும் தகனம் நடந்து கொண்டிருக்கும் காசி அரிச்சந்திரகாட் சுடுகாட்டின் படம் என்றால் நம்பி விடுவீர்கள், ஆனால் இது அரிச்சந்திர காட் அல்ல.
இது கவுல்பஜார் பாலம் இறங்கி கொளப்பாக்கத்திற்கு பல்லாவரம் சாலை திரும்பும் முனையில் அடையார் ஆற்றங்கரையில் கொரோனா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய ஒரு வயது குப்பைமேடு,இது கெருகம்பாக்கம் ஊராட்சியின் சரக எல்லை.
இந்த சாலை அத்தனை அழகிய நிழலான சாலை,அடையார் போட் கிளப் போலவே இருக்கும் , இப்போது அத்தனை அவலம்.
இங்கே கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், இந்திராநகர், முகலிவாக்கம் , விமான நிலையத்தின் குப்பைகள் கொட்டப்பட்டு தினமும் இடைவிடாமல் எரிக்கப்படுகின்றன,
படத்தில் பார்க்கும் குப்பைகள் 50 டன் எடை இருக்கும், வரும் ஞாயிறு அவ்வழியே போனால் இதை எரித்து புகையாக்கியிருப்பார்கள், அந்த 50000 கிலோ கரியமில வாயுவும் ஆவியாகியிருக்கும்.
இதை அவ்வழியே போகும் யாரும் கேட்கமாட்டார்கள், சக மனிதனை கத்தியால் குத்திக் கொன்றால் மட்டுமே கொலை இல்லை, இது போல ஒரு ஊருக்குள் வளிமண்டலத்தை , வான்வெளியை குப்பைகளை கொளுத்தி நச்சுப் புகை இட்டு நாறடித்தாலுமே கொலை தான்.
இந்த குப்பை மேட்டில் இருந்து வெறும் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் லாலாஜி ஒமேகா என்ற சர்வதேச பள்ளி உள்ளது, அங்கே படிக்கும் பள்ளிக் குழந்தைகளின் சுவாச மண்டலத்தில் இந்த நச்சுப்புகை வேதி வினையாற்றாதா? ஆனால் அந்த கொழுத்த பள்ளி நிர்வாகம் கூட இதற்கு குரல் எழுப்ப மாட்டார்கள்.
சமூகம் என்பது அரசாங்கம் அதன் பிரதிநிதிகள் மட்டுமல்ல நாமும் தான், மாற்றம் வேண்டுமென்றால் நாமும் குரல் தர வேண்டும்.
இந்தகுப்பை மேடு போலவே ஆற்றின் மறுகரையில் உள்ள இடுகாட்டு காம்பவுண்டுக்குள் குப்பை கொட்டி அதை எந்நேரமும் எரிக்கின்றனர், கவுல்பஜார் ஊராட்சி சுகாதார ஊழியர்கள், அங்கே தம் வீட்டு நீத்தாரை அடக்கம் செய்தவர்கள் இருந்தால் போய் பாருங்கள், அந்த நச்சுப் புகைச் சூழலில் அவர்களை அடக்கிவிட்டு எப்படி நிம்மதியாக உறங்குகிறீர்கள் கண்டோன்மெண்ட் பல்லாவரம் ,பொழிச்சலூர், கவுல்பஜார் மக்களே?
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
பொருள்
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.
#கவுல்பஜார் ,#கொளப்பாக்கம்,#கெருகம்பாக்கம்