இரானிய இயக்குனர் Jafar Panahi அவர்களின் கடைசி படைப்பான No Bears (2022) பார்த்தேன் , இது கடைசி படைப்பாக இல்லாமலும் கூட இருக்கலாம், இந்தப் படம் வெளியானதும் இயக்குனரை ஆறு வருடங்கள் சிறை தண்டனை விதித்து சிறையில் அடைத்தும் விட்டது இரானிய அரசு.
இரான் முரண்பாடுகளின் மூட்டையாக அமைந்த நாடு என்றால் மிகையில்லை , இரானில் டெஹ்ரான் நகரத்தில் தெருவோர கடைகளில் ஆண்கள் அமர்ந்து பிட்சரில் தரமான பீர் குடிக்கலாம், ஆனால் பெண்கள் அங்கே குடிக்க முடியாது, ஆனால் பெண்கள் pub ல் beer ஊற்றித் தரும் வேலை செய்யலாம், பெண்கள் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் தலையையும் பாதங்களையும் ,கை விரல்களையும் கூட மூட வேண்டும், அதைச் செய்யாவிட்டால் அந்தப் பெண்ணை யார் வேண்டுமானாலும் தரக்குறைவாக பேசலாம், இழிவாக நடத்தலாம் என்ற துயர நிலை உண்டு , இரானில் இளம் பெண்ணுக்கும் சுதந்திரம் இல்லை , தொண்டு கிழவிகளுக்கும் சுதந்திரம் இல்லை,இந்தியா போலவே ஆண் குழந்தைகள் பெறுவதை பெருமையாக நினைக்கும் நாடு இரான்.
மக்கள் யாருக்கும் பேச்சு, எழுத்து சுதந்திரம் இல்லாத நிலை, மக்கள் பெருக்கம், கடும் வறுமை, தாரித்ரியத்தை விரட்ட மக்கள் கள்ளக்கடத்தல்,மோசடி செய்யும் நிலை, பிறரை ஏமாற்றி பெரும்பொருள் சம்பாதித்து நாடு விடும் இழி நிலை, easy money கலாசாரம் உடன் பழமையான நம்பிக்கைகள் என அனைத்தும் கொண்ட நாடு இரான்,
இந்தியாவுக்கு ஒப்பான பழமையும் புதுமையுமான கலாசாரம் கொண்டது, ஆனால் இஸ்லாமிய மதவாத குடியரசு நாடு இரான்.
இங்கு நிகழ்ந்த இரானியப் புரட்சி, இஸ்லாமியப் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது, Persian Enkelab-e Eslami இயக்கம் 1978-79 ஆம் ஆண்டு நிகழ்த்திய இரான் மக்கள் எழுச்சி, இது பிப்ரவரி 11, 1979 அன்று முடியாட்சியை வீழ்த்தி, இஸ்லாமிய குடியரசை நிறுவி இன்று வரையிலும் வெற்றிகரமாக தொடர்கிறது.
எனவே அரசை யார் விமர்சித்தாலும் கடும் சிறை தண்டனை, அல்லது சாலையின் நாற்சந்தியில் வைத்து JCB க்ரேன் எந்திரத்தில் வைத்து தூக்கில் ஏற்றி அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவர்,
இன்று மேற்கு ஐரோப்பா போல, பாரீஸ் போல , இத்தாலி போல விளங்க வேண்டிய நாட்டிற்கு 43 ஆண்டு காலமாக இரும்புத் திரை இட்டு வைத்திருக்கின்றனர் .
நான் அமீரகத்தில் பணிபுரிகையில் அதிகம் இரானியர்களின் உணவகத்தில் சாப்பிடுவேன், கனத்த தஃப்தூன் ரொட்டி, ,சுலைமானி, ஷிராஸி சாலட் ,ரொக்கா சாலட், என எதுவும் அத்தனை தரமாக இருக்கும், அமீரகத்தில் இரவு வாழ்க்கை என்றால் நடைபாதை இரானிய உணவகத்தை தவிர்த்து சிந்திக்கவே முடியாது, இரவு 1-00 மணிக்கு போனாலும் தரமான சுலைமானி புதினா இலை இட்டு எலுமிச்சை துண்டு சொருகி மிகுந்த ரசனையுடன் வெறும் 1-00 திர்காமுக்கு குடிக்கலாம், அத்தனை அழகிய உருவமும் உள்ளமும் கொண்ட மக்கள்.
இரான் நாடு நம் இயக்குனரை படம் எடுக்கக்கூடாது, நாடு விட்டு தப்பிக்கக் கூடாது என பல நிபந்தனை விதித்ததால் அவர் இரானிய துருக்கியின் எல்லையில் ஒரு அழகிய கிராமத்தில்,அந்த ஊர் தலைவரின் சிபாரிசில் ஒரு பாரம்பரிய மண் வீடு கிடைத்து அங்கே தங்கியிருக்கிறார், அவருக்கு இணையத் தொடர்பு கிடைக்க பகீரத பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது,அங்கு இரானிய தொலைதொடர்பு இணையம் கிடைப்பதில்லை, எனவே இயங்குனர் துருக்கி இணைய சேவையை பயப்படுத்துகிறார், ஏணி இட்டு கூரை ஏறி இணையத் தொடர்பு பெற முயற்சித்தவரை அவரின் வீட்டு உரிமையாளன் கெஞ்சி தடுக்கிறான்,நீங்கள் குளிக்கும் பெண்களை எட்டிப்பார்க்கிறீர்கள் என ஊரார் பேசுவர் என காரணம் சொல்கிறான், கன்பார் இயக்குனருக்காக கூரை ஏறி இணையம் கிடைக்க உதவுகிறான்.
தன் அடுத்த படைப்பை உதவியாளர் மூலம் இந்த அவல சூழலில் சிரமங்களுக்கிடையில் தான் இயக்குகிறார் நம் இயக்குனர்.
இப்படைப்பில் இரண்டு காதல் கதைகள் உண்டு , நகர காதல் மற்றும் கிராம காதல்.
டெஹ்ரான் நகரில் நிகழும் காதல் கதையை இயக்குனரின் உதவியாளர் meta fiction பாணியில் இயக்குகிறார் ,அதில் பக்தியார் என்ற காதலரும் ஸரா என்ற காதலியையும் நாம் பார்க்கிறோம்,பக்தியார் சினிமா இயக்குனர், ஸரா சாலையோர உணவகத்தில் பணிபுரிபவள் .
இரானின் எல்லையோர கிராமத்தில் நிகழும் காதல் கதைக்கு இயக்குனர் ஒரு மௌன சாட்சியாகிறார்,
இரண்டு காதலுமே சோகத்தில் முடிகிறது.
இயக்குனர் தங்கியுள்ள அழகிய எல்லையோர கிராமத்தில் , அந்த வீட்டு உரிமையாளன் கன்பார், வெள்ளந்தி , மரியாதை மிகுந்தவன், இயக்குனருக்கு அவன் விதவைத் தாயார் மிகுந்த வாஞ்சையுடன் மண்ணில் புதைத்த அடுப்பில் இருந்து தடித்த ரொட்டி, சுலைமானி ,சாலட் தயாரித்து தருகிறார், மூட்டு வலியால் அவதிப்படுபவருக்கு இயக்குனர் தன் இரும்பு சத்து மாத்திரைகளை தருகிறார், அது அவருக்கு சற்று பலனளிக்கிறது, இயக்குனர் நடுநிசியில் காரை எடுத்துக் கொண்டு மலைகிராமத்தின் எல்லை தாண்டிப் போய் அவரின் உதவி இயக்குனரை ரகசியமாக சந்தித்து அடுத்தநாள் படப்பிடிப்புக்கு ஆலோசனைகளை தந்து விட்டு வருகிறார்,கன்பார் இயக்குனரை தடுக்க மனம் வராதவன் அவரின் மலை மண் புழுதி படிந்த காரை சுத்தம் செய்கிறான்,ஊரார் மண் புழுதி நிறம் பார்த்து நீங்கள் எங்கே சென்றீர்கள் என வதந்திகள் பரப்புவர் என அவரை எச்சரிக்கிறான்.
கன்பாரின் தாய் தூக்கம் வராமல் விழித்திருந்து இயக்குனர் வருகையில் ஒரு மூலிகை கசாய தேநீரை குடிக்கத் தருகிறார், அது அவரின் தொடர் புகைப்பழக்கத்தால் அவர் நுரையீரலில் படிந்த தாரை நீக்கும் என்று வழியில் நிறுத்தி உரிமையுடன் குடிக்க வைக்கிறார், வழியில் நீ கரடிகளைப் பார்த்தாயா? அவை இரவில் திரியும் என்று நாங்கள் ஊரார் யாரும் வெளியில் போவதில்லை,என்கிறார், இயக்குனர் அதெல்லாம் ஒன்றும் பார்க்கவில்லை என்கிறார், இது தான் படத்தின் தலைப்பான no bears ஆக மாறியது.
ஊர் கட்டுப்பாடு இருப்பதால் தன்னை புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை அந்த தாய், ஊரில் யாரையும் படம் எடுப்பதற்கும் கிராம வீட்டின் உரிமையாளன் கன்பாரிடம் இயக்குனர் கேமராவை தந்து விடுகிறார், அவன் ஊரின் திருவிழாவை வீடியோ எடுத்து வருகிறான்,
இந்த கிராமத்தில் ஒரு பாரம்பரிய வழக்கம் உண்டு பெண்குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி அறுக்கையில் அவனது முறை மாப்பிள்ளை பெயரை சொல்லியே தொப்புள் கொடி அறுப்பர், அது முடிபோட்ட பந்தமாக சுடுகாடு வரை தொடரும் என்பது அங்கு விதி.
அத்தனை அன்பான ஊர்மக்கள் , நம் இந்து கலாசாரத்துக்கு எதிர்மாறாக இடப்புறம் மனைவியை நிற்க வைத்து திருமண சடங்குகள் செய்கின்றனர், ஆற்றில் வைத்து புது மணமக்களின் பாதங்களை கழுவி வீட்டுக்கு அழைத்து வரும் சடங்கை உதவியாளன் கன்பார் காணொளி எடுத்து வந்து இயக்குனரிடம் தருகிறான்.
இயக்குனர் தான் தங்கியிருக்கும் வீட்டில் அருகே உள்ள திண்ணை போன்ற திட்டில் அங்கு விளையாடிய சிறுவர்களை அழைத்து படங்கள் எடுக்கிறார், அது அவருக்கு வினையாக முடிகிறது.
அடுத்த நாள் இயக்குனரைத் தேடி வந்த ஊர்காரர்கள் மூவர்,
இயக்குனர் முதல்நாள் எடுத்த படத்தில், இங்கு உடன் வந்திருக்கும் யாக்கோப் என்ற மூர்க்கமான இளைஞனின் காதலி கோஸல் இருக்கிறாள்,
அவள் கிராம விதியினை மீறி சோல்துஸ் என்ற இளைஞனை காதலிக்கிறாள், அது முறை
மாப்பிள்ளை யாக்கூபை கோபப்படுத்துகிறது, எனவே அவர் அந்த படத்தை தந்தால் கிராம சபையில் வைத்து அந்த தவறிழைத்த காதலரை தண்டிக்கலாம் எனக் கேட்கின்றனர், இயக்குனர் தான் அப்படி எந்த காதலர்களையும் படம் எடுக்கவில்லை என மறுத்தும் அவர்கள் நம்பவில்லை,
அரைமனதுடன் எழுந்து போகின்றனர்.
மறுநாள் ஒரு சிறுவனை சாட்சியாக இயக்குனரிடம் அழைத்து வருகிறார்கள் ஊரார், அந்த சிறுவன் இயக்குனரிடம் அன்று நடந்ததை நினைவூட்டுகிறான், தன்னை படமெடுக்கையில் அந்த காதல் ஜோடிகள் இடப்புறத்தில்
இருந்ததாக புகார் கூறுகிறான், அவனின் வயது 9 ஆதலால் அவன் சாட்சி ஊரார் நீதி மன்றத்தில் செல்லாது என்று அந்த ஊரார் படத்தை தேடி இவரிடம் வந்துள்ளனர்,
அந்த சிறுவன் விஷமக்காரன் இவர் திண்ணையில் அமர்ந்து நடித்தும் காட்டுகிறான், இயக்குனர் ஊராரை தன் அறைக்குள் அழைத்துப் போய் டிஜிட்டல் கேமராவில் படங்கள் ஒவ்வொன்றாக காட்டியவர் ,அந்த மெமரி கார்டையும் கூட கழற்றி அவர்களிடம் தந்து என்னிடம் ஒன்றுமில்லை , என வழியனுப்புகிறார்,அதிலும் ஊரார் திருப்தியாகவில்லை, ஊர் பொதுக்குழு அறையில் வைத்து அவர் அந்த காதலர்களை படம் எடுக்கவில்லை என சத்தியம் செய்யக் கேட்கின்றனர்,
இயக்குனருக்கு இந்த ஊரில் தங்க வேறு வழியில்லை,
இந்த ஊரில் விவசாயம் பொய்த்து விட்டதால் ஊரார் பலர் துருக்கியில் இருந்து கள்ளக்கடத்தல் செய்தும் , ஊரார் சிலர் அவர்களைப் பற்றி உளவு செல்லியும் வாழ்கின்றனர், இயக்குனரின் இரவுப் பயணம் அந்த கடத்தல் காரர்களுக்கு மிகுந்த தொல்லையாக இருக்கிறதால் இவரை எப்படியாவது ஊர்கட்டுப்பாடு என எதாவது சொல்லி கிளப்பப் பார்க்கின்றனர்.
மறுநாள் அந்த ஊரின் பொதுக்குழு அறைக்கு சீக்கிரமே வந்த இயக்குவரிடம் உள்ளூர்காரர் ஒருவர் சொல்கிறார், சத்தியம் செய்கிறோம் என்று பதறி உண்மையை சொல்ல வேண்டாம், பொய் கூட சொல்லலாம்,தவறில்லை,உங்கள் உரிமை அது, இது ஒரு ஒப்புக்கு தான் என்கிறார், பொதுக்குழு துவங்க இவர் முன்பாக திருக்குர்ரான் வைக்கப்பட்டு நான் அந்த இளம் காதலரை படமெடுக்கவில்லை என சத்தியம் செய்ய கேட்கப்படுகிறார், இயக்குனரோ எனக்கு இந்த முறையை விட வேறொன்று உவப்பாகப்படுகிறது,
நான் குரான் மீது சத்தியம் செய்வதற்கு பதிலாக என்னை நானே காணொளி எடுத்து அதை உங்கள் ஒவ்வொருவருக்கும் வாக்குமூலமாக தனித்தனியாக அனுப்புகிறேனே, என்றவர் பதிலுக்கு காத்திராமல் tripod விரித்து கேமரா பொருத்தி பதிவு செய்யத் துவங்க,அங்கே அதுவும் போதாதென சலசலப்பு எழுகிறது,முறை மாப்பிள்ளை ஆத்திரப்பட சபை கலைகிறது,
அன்றிரவு வீட்டு உரிமையாளன் கன்பார் இயக்குனரிடம் வந்தவன் தன் இக்கட்டான நிலைமையை சொல்லி அவர் இனி இங்கு தங்கினால் மென்மேலும் ஊரார் பிரச்சனைகள் தான் தருவர், தான் அவரை காலி செய்யவும் சொல்லவில்லை, தங்கவும் சொல்லவில்லை என்கிறான்.
மறுநாள் காலை இவர் ஊரை விட்டு செல்ல இறங்குகிறார், கன்பார் தாயார் மூலிகைகள் இட்டு கசாய தேநீர் தயாரித்து குடிக்க வேண்டி மூலிகைப் பொதியை தருகிறார், நீ புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் என்கிறார் ,கன்பார் பெட்டிகளை தூக்கி வந்து காரில் ஏற்றுகிறான்.
தாயார் கால் வலிக்கு இவர்கள் டெஹ்ரான் வந்தால் சிறப்பு மருத்துவரிடம் தான் கூட்டிப்போவதாக சொல்கிறார் இயக்குனர்.
இவர் வாடகையை காகித உறையில் இட்டு கன்பார் வாங்க மறுத்தும் தாயாருக்காக தந்தது எனத் தருகிறார், ஊரை விட்டு வெளியே வழியில், அந்த கிராமத்தின் இளம் காதலர்கள் இருவரும் முறைமாப்பிள்ளை யாகூப்பால், ஊரைவிட்டு தப்புகையில் ஆற்றுப்பாறையில் வைத்து கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டதைப் காண்கிறார்,
கன்பார் அவரை இங்கிருந்து உடனே போகும்படி கேட்கிறான்,இயக்குனர் கனத்த நெஞ்சத்துடன் காரில் கடக்கிறார், ஊர் எல்லையில் வைத்து காரில் ஏறிக்கொண்ட உதவியாளன் இயக்குனரிடம் ஒரு துயர செய்தியை பகிர்கிறான், இயக்குனரின் meta fiction திரைப்படத்தில் தோன்றிய நாயகி ஸாரா, தன்னை கெரில்லா யுத்தியில் பக்தியார் மற்றும் படக்குழு படமாக்கியதை அறிந்திருக்கவேயில்லை,
இயக்குனர் இந்த meta fiction ன் உண்மைத் தன்மைக்காக வேண்டி டெஹ்ரானில் ஒரு கடத்தல்காரனின் உதவியுடன் திருடப்பட்ட ஐரோப்பிய பாஸ்போர்ட்டில் ஸாராவின் அடையாளங்களைப் பொருத்தி மோசடி செய்து வாங்க பணம் தந்திருக்க, அவன் இவர்கள் படக்குழுவினர் என்ற உண்மையை உளவறிந்து அறிந்ததால் பக்தியாரை தெருவில் வைத்து தாக்குகிறான், பணத்தையும் திரும்பத் தருவதில்லை,
படப்பிடிப்புக்கு வேண்டி ஒரு காலாவதியான பாஸ்போர்டை நாயகன் பக்தியார் உணவகத்தின் வாயிலில் ஸாராவை சந்தித்து கையில் தந்திருக்கிறார், ஸாரா காதலன் பக்தியாரின் பாஸ்போர்ட் எங்கே எனக் கேட்க,பக்தியார் தன் பாஸ்போர்ட் இன்னும் தயாராகவில்லை, நீ முதலில் தப்பிச் செல் என்கிறார், ஸாரா தான் மட்டும் தப்பிச் செல்ல மறுத்தவள் சாவகாசமாக அந்த பாஸ்போர்ட்டை பார்க்க, அது காலாவதியாகியுள்ள ஒப்புக்கு சப்பாணி பாஸ்போர்டாக உள்ளதை அறிந்து பக்தியாருடன் தர்க்கம் செய்கிறாள் ஸாரா,காதலனுக்கு வேண்டி இட்ட உதட்டுசாயத்தை கலைத்துவிட்டு அகல்கிறாள் ஸாரா .
ஸாராவிடம் வேறு வழியின்றி இந்த meta fiction படைப்பையும்,அதில் அவள் பங்களிப்பையும் சொல்ல ஸாராவுக்கு கதிகலங்குகிறது, பாஸ்போர்ட் மோசடியில் தான் பிடிபட்டால் தன்னை ஆயுள் தண்டனை தந்து சிறையில் வைத்து வாட்டுவார்கள், அல்லது மரண தண்டனை கூட விதிப்பார்கள் எனக் கதறுகிறாள், பக்தியார் எத்தனை சமாதானம் செய்தும் கேட்காத ஸாரா , முதல் நாள் இரவில் ஆர்ப்பரிக்கும் வெண்ணிற கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்,
அவளின் சவம் கரை ஒதுங்கியதை கதறி அழுதபடி பக்தியார், இயக்குனர், அவர் உதவியாளன் , ஆம்புலன்ஸில் ஏற்றுவதுடன். இப்படம் நிறைகிறது.
இதன்பிறகு இந்த meta fiction வெளியாகி இயக்குனர் ஆறு ஆண்டு சிறைவாசம் விதிக்கப்பட்டு அனுபவித்து வருவது நிஜம்.
இப்படம் வாய்ப்பிருப்பவர்கள் இருமுறையேனும் பாருங்கள் , பல சிந்தனைகளுக்கு திறப்பாக அமையும், அழகாக சினிமாவுக்குள் சினிமாவை meta fiction பாணியில் பரீட்சார்த்தம் நிகழ்த்தி பிரமிப்பில் ஆழ்த்திவிடுகிறார் இரானிய இயக்குனர் Jafar Panahi, இதில் ஸாரா தவிர எந்த இளம்பெண்ணையும் அவர் படத்தில் காட்டுவதேயில்லை, கிராம காதலின் நாயகி கோஸல் கதாபாத்திரம் அவள் காதலன் கதாபாத்திரங்கள் வசனங்களில் மட்டும் வாழ்ந்த கதாபாத்திரங்கள், ஆனால் எங்கும் இதை குறையாக உணர முடியாதபடி cut செய்துள்ளார் இயக்குனர் .
அவர் ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனை முடித்து வெளியே வந்து மிகுந்த வீர்யமுள்ள படைப்பை மீண்டும் தருவார் என நம்புவோம்.