தியாகராய நகர் முதல் ப்ராட்வே வரை ஆன பேருந்து வழித்தடமான 11 A இன்றும் கூட உள்ளது, இன்று வள்ளலார் நகர் வரை இந்த 11A பேருந்து தட சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது,இது Bedford நிறுவனம் தயாரித்த பேருந்து, இதில் அவசர கால கதவு கூட இருந்ததைப் பாருங்கள்,GOVERNMENT TRANSPORT MADRAS என்ற பெயரில் இந்த பேருந்து சேவை இருந்திருக்கிறது.
தியாகராய நகர் பேருந்து நிலையம் 1923 முதல் 1925 ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்டது,
இந்த 2023 ஆம் ஆண்டில் தியாகராய நகரின் நூற்றாண்டை நாம் கொண்டாடப் போகிறோம், இந்த மாடிப் பேருந்தின் புகைப்படம் 1927 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது.
1920 ஆம் ஆண்டு நகர வடிவமைப்பு செய்யப்பட்டு இங்கிருந்த Long Tank என்ற பெரிய ஏரியை வற்றச்செய்து மண் அடித்து வயல்வெளிகள் கையகப்படுத்தப்பட்டு இந்த பரந்த இரட்டை வழி நிழற்சாலைகள் இடப்பட்டன, இன்றும் இந்த மாம்பலம் , தி.நகர், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதைகளின் தரையில் மழைக்காலங்களில் நீர் ஊற்றெடுப்பது இந்த ஏரிபூமி முகாந்திரத்தால் தான்.
1927 ஆம் ஆண்டில் தியாகராய நகரில் டபுள் டெக்கர் பேருந்து ஓடியிருந்தால் அன்று அதன் கூட்டம் எப்படி இருந்திருக்க வேண்டும்?, 1911 ஆம் ஆண்டு மாம்பலம் ரயில் நிலையம் துவங்கியுள்ளனர்,இங்கு நல்லி சின்னசாமி டெக்ஸ்டைல்ஸ் 1928 ஆம் ஆண்டு துவங்கப்பட்டுள்ளது, மாம்பலம் ரயிலடியில் இன்றுள்ள வெளியூர் நடைமேடை தான் பழமையானது, எழும்பூர் காஞ்சிபுரம் ரயில்கள் இங்கு இடைநின்று சென்றுள்ளன,தாம்பரம் உள்ளிட்ட பிற ரயில் நிலையங்கள் 1931 மே மாதம் துவங்கப்பட்டுள்ளன.
தியாகராய நகரில் இருந்து அண்ணாசாலைக்குச் செல்ல ஒருவர் ஜி.என்.செட்டி சாலையை பயன்படுத்துவதே புத்திசாலித்தனம், எக்காரணம் கொண்டும் வெங்கட் நாராயணா சாலையில் நுழைந்து அண்ணாசாலையில் கலக்க நினைக்கக் கூடாது, காரணம் இந்த இரு சாலைகளுமே 45° பாகையில் பனகல் பார்க்கில் வந்து சந்திப்பதைப் பாருங்கள், ஜி.என்.செட்டி சாலையில் செல்ல உடனே ஜெமினி மேம்பாலத்தை அடையலாம்,வாகன நெரிசல் சிக்னல்களை தவிர்க்கலாம், இந்த நல்லெண்ணத்தில் தான் இந்த வெங்கட்நாராயணா சாலை அண்ணாசாலை சந்திப்பை நெடுங்காலமாக ஒருவழிப்பாதையாக்கி உள்ளனர், நீங்கள் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் திரும்பி , வடக்கு போக் சாலையில் பயணித்து ஜெமினி மேம்பாலத்தை அடைய வேண்டும் அல்லது தியாகராய சாலையில் வலம் திரும்பி அண்ணா சாலையில் இடம் திரும்பி ஜெமினி மேம்பாலத்தை அடைய வேண்டும், எனவே சென்னையில் வசிப்பவர்கள் கட்டிடத்தில் அவசரகால வழிகள் அறிவதை போல சென்னையின் சாலைகளை அறிவது கட்டாயமாகும்.
இன்று தி.நகரின் நிழற்சாலைகளில் வருடாந்திர வடகிழக்கு பருவமழையில் முறிந்து விழாமல் கம்பீரமாக கிளை பரப்பி வீற்றிருக்கும் கருத்த கட்டிப்பிடிக்க முடியாத தூங்குமூஞ்சி மரங்களின் வயது குறைந்தது
100 எனக்கொள்க.
Double decker என்ற மாடிப்பேருந்துகள் மற்றும் vestibule என்ற தொடர் பேருந்துகள் இன்றைய நகர பெருக்கத்தில் திணறும் வாகன நெரிசலுக்கு ஒத்து ஒராது என்பதால் படிப்படியாக 2000 ஆண்டு முதல் வழக்கொழிக்கப்பட்டுவிட்டது ,
1984 ஆம் ஆண்டு திருவள்ளுவர் 137 வழித்தடத்தில் மதுரை முதல் சென்னைக்கு நாங்கள் Double decker பேருந்தில் வந்து இறங்கியது மங்கலாக நினைவிருக்கிறது, அதீத பயணநேரம் இந்த வழித்தடத்தை வழக்கொழித்திருக்க வேண்டும்.
1998 முதல் 2001 வரை நான் 70 A தாம்பரம் முதல் ஆவடி வழித்தடத்தில் Double decker பேருந்தில் தினமும் பயணித்துள்ளேன்,அதே போல 2001 முதல் 2003 வரை 21G தாம்பரம் முதல் பிராட்வே வழித்தடத்தில் vestibule பேருந்தில் பயணித்துள்ளேன்.