Candid photography விற்பன்னர் நண்பர் Joseph Raja எடுத்த படம் இது, அவரது ஆல்பம் பார்க்கையில் அதில் இருந்து நான் விரும்பி எடுத்த படம் .
இந்த ஒற்றைக்கம்பி நாதம் மீட்டியபடி வரும் பெரியவர், ஜமீன் பல்லாவரத்தில் வசித்தவர், பல்லாவரத்தில் ஜமீன் இருந்தது அதில் இசைக்கலைஞர்கள் இருந்தனர், ஜமீனின் வீழ்ச்சிக்குப் பின்னர் அந்த இசைக்கலைஞர்கள் என்ன ஆனார்கள் எனத் தெரியாது, அதில் ஒருவர் இந்த கலைஞர், அத்தனை நெரிசலான பல்லாவரம் ரிட்டர்ன் ரயிலில் சலசலவென இசை வாய்பாட்டுக் குழுக்கள் இருக்கும் சீட்டாட்ட குழு, விஷ்ணு சகஸ்ரநாமகுழு, அயிகிரி நந்தினி குழு, திருப்பாவை குழு என பெட்டிக்கு பெட்டி குழுக்கள் இருந்தனர்,உடன் இந்த இசைக்கலைஞர்கள் போல பலர் இருந்தனர்,எனக்கு மீட்டர் கேஜ் ரயில் தான் சகலம் சிறுவனாக பாட்டன் சொத்தாக கருதி தாம்பரம் பீச் மார்க்கத்தில் அப்படி அலசியிருக்கிறேன், மனதுக்கு தோன்றும் ரயில் நிலையத்தில் இறங்கி அந்த ஸ்டேஷன் ரோடு மார்க்கத்தில் சுற்றி அலைந்து வேடிக்கை பார்ப்பது என் வாடிக்கை, அப்படி இந்த பெரியவரை சுமார் 12 வருடங்கள் ரயில் பயணத்தில் பார்த்துள்ளேன், உண்மையான இசைக்கலைஞர்களுக்கு மதம் கிடையாது, இவர் ரகுபதி ராகவ துவங்கி, மீரா பஜன் பாடல்கள் , கஸல் பாடல்கள் என தொடர்ந்து பாடுவார், அந்த தம்பூரா போன்ற மரத்தால் செய்த இசைப்பெட்டியில் ஒற்றை கம்பி இருக்கும் , இடது கையின் மூன்று விரல்களால் அந்த பெட்டியை தாங்கிப்பிடித்துக் கொண்டு இரண்டு விரல் கொண்டு டேபிள் ஸ்பூன் கொண்டு மீட்டுவார், சிலசமயம் பாடாமல் வெறுமன தம்புரு மீட்டுவார், அதை இப்படத்தில் பாருங்கள், ஒரு அழிந்த கலையை அழிந்த கலைஞனை ஆவணப்படுத்தியுள்ளார் நண்பர்,சமகாலத்தில் candid photography ல் இவரை அடிக்க ஆளில்லை என அறுதியிட்டு சொல்வேன், மிகவும் underated, சிப்பிக்குள் நத்தை, குடத்தில் இட்ட விளக்கின் உதாரணம், அவரின் மூன்று கனத்த ஆல்பங்கள் அவர் வாழும் அர்த்தமுள்ள வாழ்விற்கு சாட்சியம், மயிலை, திருவல்லிக்கேணி, மெரினா, தேனி,இத்தாலி ,ஸ்விஸ், கஜகஸ்தான் என எத்தனை நிலப்பரப்புகளை அற்புதமாக தன் கேமராவில் கவர்ந்து வந்துள்ளார்,
பரதநாட்டிய அரங்கேற்றம் படங்களை இவர் போல யாரும் பிரயத்தனத்துடன், end result உடன் live stage ல் எடுக்கவே முடியாது,
அத்தனை உணர்வுகளை சட்டகத்தில் ஆவணப்படுத்திவிடுவார்,
மேடையில் ஆடிய கலைஞர்களுக்கு படங்களை காண்கையில் பரவசம் நிச்சயம் என்பது கண்கூடு .
இசைஞானி, மெல்லிசை மன்னர் , எஸ்பிபி, தாசேட்டா போன்ற இசை ஆளுமைகளின் மேடை தருணத்தை இவரைப்போல அங்கும் இங்கும் ஓடி candid photography செய்தவர்கள் இலர், அவர்களின் சிறந்த படங்கள் google ல் தேடினால் வருபவை, மிகச் சிறப்பாக ஆழ்மனம் அறிந்து தரவிறக்குபவை இவருடையது,இவர் எடுத்த படங்களை பெயரெடுத்த வார இதழ் கூட credit தராமல் எடுத்து பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவரின் படைப்புகள் விரைவில் முறையான தகுதியான ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட வேண்டும் என்பது என் அவா.