எங்க வீட்டு வேலன் பக்தி திரைப்படம் 1992 ஆம் ஆண்டு மவுண்ட் ரோடு சஃபையரில் 100 நாட்களைக் கடந்து ஓடியது, அங்கே வாசலில் கன்னிச் சாமி பாலகன் சிம்புவுக்கு பிரம்மாண்ட கட் அவுட் அமைத்திருந்தனர், அறுபடை வீடு theme, கருமாரி அம்மன் புற்று theme என பிரம்மாண்டமாக சித்திரை பொருட்காட்சி அரங்கு போல அதன் வாயிலில் அமைத்திருந்தனர், இந்த காட்சி பசுமையாக என் மனதில் பதிந்திருந்தது, சற்று மெனக்கெட்டு தேட இந்த படம் கிடைத்து விட்டது.
சென்னை தொலைக்காட்சியில் Second channel கூட வராத யுகம், சினிமா bore அடிக்காத தலைமுறை, காலை சமையலை முடித்து விட்டு சாரை சாரையாக பகல் காட்சிக்கு தாய்மார்கள் சிறுவாட்டு காசை சினிமாவுக்கு செலவு செய்த லைசன்ஸ்ராஜ் யுகம், இந்த பொழுது போக்கு எல்லாம் மாயை, சினிமா நீர்குமிழி என சொன்னால் யாரும் நம்பாத காலகட்டம்,பல திரைப்படங்கள் வாரநாட்களில் வரும் தாய்மாரை குறிவைத்தும்,வார இறுதி நாட்களில் வரும் குடும்பத்தாரை குறிவைத்துமே எடுக்கப்பட்டன.
இந்த சஃபையர் தியேட்டர் செனலனையின் பெருமை, ஆங்கிலம் , இந்தி, மலையாளம் ,தெலுங்கு என நல்ல பெயரெடுத்த திரைப்படங்களை தேர்வு செய்து 100 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து திரையிடுவர்,
சிறுவனாக தினசரி விளம்பரத்தில் சபையர் எனப் படித்து, இது என்ன சபை தெரியும் என்ன சபையர் என யோசித்துள்ளேன், சஃபையர் என்று அவர்கள் எழுதியதில்லை, ஆங்கிலத்தில் கூட safire என்றே எழுதியிருப்பர் sapphire என சரியாக எழுதியதில்லை.
1964 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது, இந்தியாவின் முதல் மிகப்பெரிய மூன்று திரையரங்கு வளாகம் சஃபைர் தியேட்டர் .
இந்த தியேட்டர் வளாகம் மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ளது, இன்றும் இந்த பஸ் ஸ்டாப் பெயர் சபையர், தொட்டடுத்த சுரங்கநடைபாதை பெயர் சபையர் சப்வே தான், மூன்று அரங்குகளைக் கொண்டிருந்தது. புளு டயமண்ட், மற்றும் எமரால்ட். Safire என்ற மிகப்பெரிய திரையில் 1000 பேர் அமரலாம்,ஹாலிவுட் பிரம்மாண்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டாலும், மற்ற இரண்டு, எமரால்டு மற்றும் ப்ளூ டயமண்ட் இந்தியப் படங்களைத் திரையிட்டன.
Safire இந்தியாவின் முதல் 70 mm திரையரங்கமாக கருதப்பட்டது.
ப்ளூ டயமண்ட் பழைய ஆங்கிலத் திரைப்படங்களைத் திரையிடப்படும்,300 பேர் அமரலாம், காலை 9 மணி திரையில் படம் துவங்கினால் திரும்ப திரும்ப படம் relay ஆக திரையிடப்படும், டிக்கெட் வாங்குபவர் நள்ளிரவில் தியேட்டர் மூடும் வரை அதில் உட்கார்ந்து கொள்ளலாம், வெளியூர் விற்பனை பிரதிநிதிகள் இந்த திரையரங்கை வேலை முடித்து ரயில் பிடிக்கும் முன்னர் வரை பயன்படுத்துவர், இளம் காதலர்களின் EMA காதலர்களின் புகலிடம் புளு டயமண்ட்.
இந்த சஃபையர் , ப்ளூ டயமண்ட், எமரால்ட் தியேட்டர் வளாகம் 1994 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் கையகப்படுத்தப்பட்டது,அங்கே அதன் புதிய தலைமையகத்தை கட்ட நினைத்தது, அதற்கு வேண்டி Safire வளாகம் முழுவதும் இடிக்கப்பட்டு காணாப்பிணமாக்கப்பட்டது, ஆனால் அதிமுக அதன் தலைமையகத்தை அங்கு கட்டி முடிக்கவுமில்லை,Dog on the manger போல முடிந்தது, இறுதியில் கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நிலப்பரப்பை 2012 ஆம் ஆண்டு விற்பனைக்கு என அறிவித்தது, இன்று நகருக்குள் பெரும் புதர் மண்டிக் கிடக்கிறதை படங்களில் பாருங்கள் .