சென்னை கீழ்பாக்கத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து நியூ ஆவடி சாலையின் முனையில் வலது புறம் அமைந்திருந்த இந்த அரண்மனை போன்ற கட்டிடத்தின் பெயர் குஷால் தாஸ் கார்டன்ஸ்,
இதற்கு நேரே பச்சையப்பன் கல்லூரி உள்ளது,இங்கே நூற்றுக்கணக்கான தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்துள்ளது, குறிப்பாக சந்திரமுகி , ஃப்ரெண்ட்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (கண்ணாமூச்சி ஏனடா பாடல் ) என நிறைய திரைப்படங்கள்,
2018 ஆம் ஆண்டு வாக்கில் குஷால் தாஸ் கார்டன் முழுக்க தரைமட்டமாக்கப்பட்டு அங்கே Ankur குஷால் தாஸ் hirise apartments கட்டி முடிக்கப்பட்டு சுமார் நூறு உயர்தர அடுக்ககங்களில் மக்கள் இன்று குடிவந்துவிட்டனர்.
இந்த குஷால் தாஷ் கார்டன்ஸ் அரண்மனை கட்டிடத்துக்கு முக்கியமான வரலாறு உண்டு,
குஷால் தாஸ் என்ற ஒரு குஜராத்தி தொழிலதிபர் இதன் உரிமையாளர் ஆவார், இந்த அரண்மனை வீட்டை TSPLP சிதம்பரம் செட்டியார் வாடகைக்கு எடுத்து நியூடோன் ஸ்டுடியோஸ் ஆக நடத்தி வந்தார், இங்கே தான் இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களின் இரண்டாம் திரைப்படமான சீமந்தினி 1936 ஆம் ஆண்டில் படமாக்கப்பட்டது,
இது தமிழ் மற்றும் தெலுங்கு வசனங்களைக் கொண்ட படைப்பாகும், இந்த திரைப்படத்துக்கு தெலுங்கு பார்வையாளர்களுக்கு சீமந்தினி என்றும் தமிழ் பார்வையாளர்களுக்கு சோம வார விரத மகிமை என்றும் பெயர் சூட்டி உள்ளனர், நாயகன் M.R. கிருஷ்ணமூர்த்தி தெலுங்கில் வசனங்களைப் பேச நாயகி T.P.ராஜலஷ்மி தமிழில் வசனங்களைப் பேசி கார்பன் மைக்ராபோன் வைத்து live recording செய்யப்பட்டு இப்படம் வெளியாகியுள்ளது, இப்படத்தின் பிரதி முற்றிலும் அழிந்து விட்டது.
நடிகை T.P.ராஜலஷ்மி தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமை ஆவார், அவருக்கு உரிய மரியாதையை சினிமா உலகம் தரவில்லை, 1931 ஆம் ஆண்டு வெளியான "காளிதாஸ் " திரைப்படத்தின் நாயகி இவர், 1936 ஆம் ஆண்டு வெளியான "மிஸ் கமலா" திரைப்படத்தின் இயக்குனர் இவர்.
நீங்கள் அடுத்தமுறை வெகுஜன தமிழ் திரைப்படங்களில் pediment வைத்து அதன் உச்சியில் gazebo வைத்து பிரம்மாண்டமான தேனிரும்பு வாயிற்கதவுகளை, முகப்பில் பிரம்மாண்ட நீரூற்றை பார்த்தால் அது உறுதியாக குஷால்தாஸ் கார்டன் எனக்கொள்க, சினிமாகாரார்களுக்கு இது பசுமையான மலரும் நினைவுகளை மீட்டெடுக்கும் முகவரியாக இருக்கும், இந்த சாலையில் போகையில் நிச்சயம் அவர்கள் திரும்பிப் பார்ப்பர்.
மாற்றம் ஒன்று தான் உலகில் மாற்றமில்லாதது , இவர்கள் ஒரு புராதான கட்டிடத்தை இடிக்கும் முன் படங்கள் கூட எடுத்து ஆவணப்படுத்துவதில்லை என்பதே என் வருத்தம்,தூக்கில் போடுபவனுக்கு கூட mug shot எடுத்து எடை எடுத்து ஒப்பிட்டு தூக்கில் இடுவர், ஒரு பழமையான கட்டிடத்தை ஓரிரவில் இங்கே இருந்த அடையாளமின்றி இடித்து தரைமட்டமாக்கி விட்டுவர்,அல்லது தீக்கிரையாக்கி விடுவர்.
சென்னையில் மட்டும் எத்தனை திரைப்பட கல்லூரிகள் உண்டு? அரசு, தனியார் என்று, குஷால்தாஸ் கார்டன் தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனை முக்கியமானது, அதை ஆவணப்படுத்தி விடை தந்து பாட்டன் சாவு போல கொண்டாடி அனுப்பி வைக்க ஒருவருக்குமா தோன்றவில்லை?