பூவிழி வாசலிலே (1987) திரைப்படம் நம்மால் மறக்கமுடியாத த்ரில்லர் திரைப்படம்,
அதன் மூலப் படைப்பான "பூவின்னு புதிய பூந்தென்னல் " (1986) திரைப்படம் தோல்வியாக அமைந்தது,
இயக்குனர் ஃபாஸில் தோல்வியை கண்டு துவளாமல் அந்த படைப்பை மெருகேற்றி மாற்றி பிற மொழிகளில் வெற்றி பெறுவதில் வித்தகர்,இப்படி என்னென்னும் கண்ணேட்டன்டெ படத்தை வருஷம் 16 என இயக்கியது வரலாறு.
தமிழில் சத்யராஜ் நடித்த வேடத்தில் மலையாளத்தில் மம்மூட்டியும், ரகுவரன் வேடத்தில் சுரேஷ்கோபியும், கார்த்திகா வேடத்தில் நதியாவும் T.S.ராகவேந்தர் நடித்த வேடத்தில் திலகனும் நடித்தனர், மம்மூட்டியின் ஆவனாழி திரைப்படத்தை கடமை கண்ணியம் கட்டுப்பாடு திரைப்படமாக எடுக்கையில் சத்யராஜ் எப்படி இன்ஸ்பெக்டர் "கரடி "பலராமாக மனதில் நின்று விட்டாரோ , அது போல பூவிழி வாசலிலே திரைப்படத்தில் ஜீவாவாக மம்மூட்டி செய்த கிரண் என்ற அந்த குடிகார ஓவியர் வேடத்தில் சத்யராஜ் பிரமாதப்படுத்திவிட்டார்,
சுஜீதா எனக்கு மிகவும் பிடித்த நடிகை, அத்தனை அழகாக இந்த செவிப்புலன், பேச்சுபுலனற்ற மூன்று வயது சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்து விட்டார்,இவரே மலையாளம்,தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்திருந்தார்.
அதே போலவே நடிகர் பாப் ஆன்டனி வில்லனின் கையாள் கதாபாத்திரத்தில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்து விட்டார், வில்லனுக்கு இவர் கதாபாத்திரத்தால் பலமா? இவர் கதாபாத்திரத்தால் வில்லனுக்கு பலமா? என்று வியப்பான வில்லன் கையாள் கதாபாத்திரம், காலஞ்சென்ற ஒளிப்பதிவாளர் ஆனந்தகுட்டன் இவருக்கு வைத்த backlighting, frames எல்லாம் அலாதியானவை, உலகத்தரமானவை, anton chigurh போல இருக்கும் , பயத்தில் குடலை கலக்கி விடும் , பாப் ஆண்டனி வில்லன் கையாளாக மலையாளம்,தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தியில் நடித்திருந்தார்.
மலையாள வடிவம் பூவின்னு புதிய பூத்தென்னல் இறுதிக்காட்சி பார்க்கையில் நமக்கு கண்கள் குளமாகிவிடும், இதில் நீர் தான் theme, பகல் வெளிச்சம், கொச்சின் துறைமுகத்தில் நீர்மேல் அமைந்த சரக்கு ரயிலடி தண்டவாளத்தில் இந்த இறுதிக் காட்சியை படமாக்கியிருந்தனர், மம்மூட்டி இறுதியில் குழந்தையை காப்பாற்ற நடந்த சண்டையில் குழந்தையை கல்லைக் கட்டி நீரில் எரிய முனையும் பாப் ஆண்டனியை leg kick செய்து கத்தியை திருப்பி இறக்கி கொன்றுவிடுவார், சுரேஷ் கோபி மம்முட்டியை நெஞ்சில் சுடுவார், அடுத்து குழந்தைக்கு குறி வைக்கையில் மம்முட்டி கைகளால் தடுத்து கெஞ்சியபடியே குழந்தையை மறைத்தபடி முன்னேறுவார், அப்போது மூன்று முறை அடுத்தடுத்து சுரேஷ் கோபியால் சுடப்படுவார், இருந்தும் சுரேஷ்கோபியின் குரல்வளையை பற்றி நெறித்து தூக்கி கொன்று தண்டவாளத்தில் வீசி தானும் விழுந்து இறப்பார், குழந்தை பென்னி வந்து அவருக்கு முத்தமிட்டு எழுப்பி தோற்பான், நதியா வந்து குழந்தையை அணைப்பதுடன் படம் முடியும், இந்த நாயகன் சாகும் சோக முடிவு படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது, அந்த ஓணத்திற்கு ஆறுபடங்கள் வெளியானதில் ஆவனாழி மற்றும் நன்னி வீண்டும் வருக மட்டுமே வெற்றி பெற்றன, இது தயாரிப்பாளர் ஸ்வர்கசித்ரா அப்பச்சனின் முதல் திரைப்படம் கூட,ஆனால் இட்ட முதலைக் கூட வசூலிக்கவில்லை.
ஆனால் தமிழ் வடிவமான பூவிழி வாசலிலே 1987 ஆம் ஆண்டு வெளியாகி அவ்வருடத்தின் வசூல் சாதனை திரைப்படமாக அமைந்தது.
இந்த ஐந்து இந்திய மொழி வடிவங்களில் இசைஞானி தமிழுக்கு மட்டும் இசையமைத்தார், நடிகர் ரகுவரன் இந்த ஆனந்த் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனித்துவமான உடல்மொழியுடன் செய்தார், தனக்கு துரோகம் செய்து தன் மேனேஜருடன் EMA உறவில் இருந்த மனைவியைக் கொன்று, மேனேஜர் வேணுவைக் கொன்று, அந்த கொலையை பார்த்த விதவைத் தாயைக் கொன்று அந்த குழந்தையையும் கொல்லத் தேடுகிற சைக்கோ வில்லன் பிஸினஸ்மேன் கதாபாத்திரம், ஆப்பசைத்த குரங்கு போன்ற அவலத்தை அத்தனை தனித்துவமாக செய்திருந்தார் நடிகர் ரகுவரன், இந்தியில் இவர் வேடத்தில் அனுபம் கெர் நடித்தார்.
அதே போலவே இந்த குழந்தையை காப்பாற்றும் நாயகனின் பின்னணியும் சுவாரசியமானது,அத்தனை அழுத்தமான பாத்திர படைப்பு, அர்த்தமிக்கது, சத்யராஜ் மனைவி சுசீலா அவரது முறைப்பெண், பால்யத்தில் இருந்தே சிறிய மனப்பிசகு உண்டு, வீட்டார் மருத்துவ உதவி தராமல் மணமுடித்தால் சரியாகும் என்று முறைமாப்பிள்ளை இவருக்கு மணமுடிந்து வைக்க மனைவி கருவுற்று குழந்தை பெற்றும் மனநிலை சரியாகாமல் மேலும் முற்றி, குழந்தையின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்று தானும் தூக்கு மாட்டி இறக்கிறார், சத்யராஜ் அது முதல் மொடா குடிகாரனாகிறார் , நாயகனின் முன்கதையை வசனங்கள் மூலமே நிறுவுகிறார் இயக்குனர் ,அதே போல வில்லனின் தரப்பு நியாயத்தை வசனங்கள் மூலமே நிறுவுகிறார் இயக்குனர்.
நாயகர்கள் சத்யராஜ் துவங்கி அனைவரும் standard நிறுவனத்தின் Gazel என்ற மாப்பிள்ளை அழைப்பு கார் வைத்திருந்தனர், அதன் சக்கரத்தின் hub cover அடிக்கடி கழன்று விடும், அதை அடிக்கடி முடுக்கி தட்டி மூடவேண்டும், இல்லை என்றால் கார் ignition இயங்காது, பாதுகாப்பு அம்சமாக இந்த அவல feature standard நிறுவனத்தின் gazel கார்களில் இருந்ததா ? அல்லது திரைக்கதையில் detail ற்கு வேண்டி சேர்த்ததா? என தெரியவில்லை, அதே போல தமிழில் சவ ஊர்வலம் போகையில் தலையில் தோல் தொப்பி,தோல் கவச உடை, தோல் காலணி அணிந்து ஒருவர் கொள்ளிச் சட்டியுடன் நடந்து போவதை காட்டி அன்று கூடுதலாக திகில் கூட்டியிருப்பார்கள், அப்படி இந்தியாவில் எந்த ஊரில் சவ ஊர்வலம் நடக்கிறது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை, இணைப்பு படம் பார்க்க.
மலையாளத்தில் சுரேஷ் கோபியிடம் இல்லாத அந்த வில்லத்தனம் ரகுவரனிடம் காணலாம், இரு உயரமான வில்லன்கள் என்பதால் தனக்கு clutches வைத்து சற்றே விந்தி நடந்து விழிகளாலேயே உடல்மொழியாலே வசனங்களாலேயே அப்படி மிரட்டுவார், இவர் போல யாரும் பில்லியர்ட்ஸ் மேஜையில் நளினமாக தோன்றவில்லை,ரகுவரன் தெலுங்கு வடிவமான பசிவடி பிராணம் படத்திலும் தோன்றினார்.
பசிவடி பிராணம் (குழந்தையின் உயிர் ) திரைப்படம் ஏழு மொழிகளிலும் வெளியான இந்த படைப்பின் உச்ச சாதனையை செய்த படைப்பாகும், பசிவடி பிராணம் திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளியானது, வெளியான திரையரங்குகளில் ₹5 கோடிக்கு மேல் வசூலித்தது.
பசிவடி பிராணம் நடிகர் சிரஞ்சீவியின் முதல் வெள்ளி விழா வெற்றிப் படமாக அமைந்தது. திருப்பதியில் தினம் ஐந்து தினசரி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது, இன்னும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை,பிரதாப் தியேட்டரில் 175 நாட்கள் ஓடியது. அந்நாட்களில்,
ஆந்திர மாநில அரசு ஸ்லாப் முறையை அறிமுகப்படுத்தியதால், ஒரு தெலுங்கு திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் நான்கு தினசரி காட்சிகளுடன் ஓடுவது மிகவும் கடினமாக இருந்தது.
ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் பசிவடி பிராணம். ரஷ்யாவில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்தது, ரஷ்யாவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, "ராஜ்கபூரின் திரைப்படங்கள்" மற்றும் மிதுன் சக்ரவர்த்தியின் "டிஸ்கோ டான்சர் (1982)" ஆகியவற்றிற்குப் பிறகு, ரஷ்யாவில் வெற்றி பெற்ற இந்தியத் திரைப்படம் பசிவடி பிராணம்.
"பூவின்னு புதிய பூத்தென்னல் " திரைப்படம் தவிர்த்து அத்தனை படைப்புகளிலும் நாயகன் இறுதியில் மடிவதில்லை,
இப்படம் வங்கதேசத்தில் Khotipuron என்றும், சிங்களத்தில் Veda Barinam Vedak Nehe 1991 என்றும் ஆறு வெவ்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட முதல் மலையாளத் திரைப்படமாகவும்,மலையாளத்தில் இருந்து ரஷ்ய மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது.
தமிழில் பாடகர் மனோ அறிமுகமான படம் இது , அண்ணே அண்ணே பாடல் பாடியவர் என அடைப்புகுறி அடைமொழி இருந்தது, நிழல்கள் ரவிக்கு நிழல்கல் ரவி என டைட்டில் எழுதியிருந்தனர்.
தமிழ் வடிவத்தின் இறுதி சண்டைக்காட்சியை இரவில் அமைத்திருந்தார் ஃபாஸில், இதற்கு நெருப்பு theme, ரகுவரன் நெருப்பில் விழுந்து இறப்பார், சத்யராஜ் சாக்லெட் பட்டை தின்றபடியே பாப் ஆன்டனியை துப்பாக்கி இருந்தும் சுடாமல் கத்தியில் மார்பில் குத்தி கொல்வார், குழந்தை ராஜா அதை சாக்கோ பார் தின்றபடி மகிழ்ந்து பார்ப்பது போல தமிழ் பார்வையாளர்களுக்கு வேண்டி ரஸமாக அமைத்திருந்தார்.
இதில் குழந்தையின் இறந்த அப்பாவாக நடிகர் ஸ்ரீநாத் (உச்சக்கட்டம்) சில montages ல் மட்டும் வந்து போனார்,அம்மாவாக ராஜலட்சுமி நடித்தார்,
மலையாள டைட்டில் கார்டில் வரைகலை வரைந்து குழந்தையின் வீடு விடும் புறப்பாட்டை சொல்லியிருந்தனர்.
இப்படைப்புகளில் இசை என்றால் இசைஞானி இசையே சிறந்தது இரண்டாவது கண்ணூர் ராஜனுடையது, மலையாளத்தில் சித்ரா பாடிய பீலி ஏழும் வீஷிவா என்ற மெலடிக்கு மாற்றாக ஆட்டமெங்கே என்ற பார் பாடல் அமைந்தது, அத்தனை அழகிய மெலடி அது அதில் மம்முட்டி பாடி ஆடவும் செய்வார்.
பூவிழி வாசலிலே திரைப்படத்தில் மலையாளம் மூத்த நடிகர் அடூர் பாஸி பள்ளியில் அச்சனாக நடித்தார், மணியம்பிள்ளராஜு சத்யராஜின் நண்பராக நடித்தார்.
இப்படைப்புகளில் மிகச்சிறந்த நாயகர் என்றால் மம்மூட்டி மற்றும் சத்யராஜ், மிகச்சிறந்த நாயகி என்றால் கார்த்திகா என்பேன்.
இயக்குனர் ஃபாஸிலின் சாதனை இந்திய சினிமாவில் முக்கியமானது என்றால் மிகையில்லை.