இடிக்கப்பட காத்திருக்கும் செங்கல்பட்டு திருமலை டாக்கீஸை இன்று அவ்வழி கடக்கையில் ஓரம் கட்டி படம் எடுத்தேன், இத்திரையரங்கத்தின் துவக்கம் 1940 ஆம் ஆண்டு.70 வயதைக் கடந்த செங்கல்பட்டு வாசிகளின் ஆதர்சம் இந்த திருமலை டூரிங் டாக்கீஸ்.
முப்பது வருடங்களுக்கு முன்பு வரை திருச்சி மதுரை நகரங்களுக்குச் செல்லும் திருவள்ளுவர் பேருந்துகள் இந்த GST சாலை வழியே தான் செல்லும் , மதுரையில் இருந்து வருகையில் அதிகாலை இந்த திருமலை டாக்கீஸ் தான் முதலில் கண்விழிக்கையில் கண்ணில் படும், எனக்கு அப்படித்தான் இந்த டாக்கீஸ் மனதில் பதிந்தது.
எம்ஜியார் , சிவாஜி போன்ற உச்ச நட்சத்திரங்கள் தங்கள் புதுப்பட வெளியீட்டுக்கு வந்த திரையரங்கம் இது, சுதந்திரத்துக்கு முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் டாக்கீஸ் இது, காஞ்சி முருகன் , சென்னை கெயிட்டி , செங்கல்பட்டு திருமலை’ என்பது அந்நாளில் பிரபலமான வாசகம் என்று என் மறைந்த அப்பா , சித்தப்பா என்னிடம் கண்கள் விரியப் பகிர்ந்ததுண்டு. அவர்கள் பால்யத்தில் பள்ளி வகுப்பை மட்டம் போட்டு பலதிரைப்படங்கள் பார்த்த டாக்கீஸ் இது என பகிர்ந்துள்ளனர்,
என் அப்பா அப்படி 8 ஆம் வகுப்பு தோல்வியடைய சிலகாலம் இந்த டாக்கீஸில் உதவி ஆபரேட்டராக வேலை பார்த்த பல கதைகளை சொல்லியிருக்கிறார், திரையில் திரைப்படம் ஓடுகையில். கார்பன் ராடுகள் சிரத்தையாக முறையாக மாற்றப்பட வேண்டும் இல்லை என்றால் திரையில் படம் ஒளி மங்கி கடும் விசில் பறக்கும் , ரசிகர்களின் வசவு கேட்கும்,ஒரு அசகாய வெள்ளை ஒளி ப்ரொஜக்டரில் இருந்து ஒளிர்ந்தபடி இருக்கும். அந்த ஒளிக்கு எரிபொருள் இந்த கார்பன் ராடுகளாம், ரீல்களுக்கு இடையில் எரிபொருளான இந்த கார்பன் ராடுகளை கவனமாக மாற்றுவாராம் என் அப்பா.
இந்த தியேட்டரை துவக்கிய திருமலை நாயுடு அவர்கள் , திரை உலகம் மற்றும் அரசியல் பிரபலங்களோடு நெருங்கிய நட்பில் இருந்தாராம், செங்கல்பட்டு நகராட்சியின் துணைத் தலைவர் உள்ளிட்ட ஏகப்பட்ட பொறுப்புகளை வகித்தாராம்.
1940 ஆம் ஆண்டில் அவரால் துவங்கப்பட்ட திருமலை டாக்கீஸ், அவரது மறைவுக்குப் பின் மூன்றாம் தலைமுறை வரை தொடர்ந்தது. துரதிருஷ்டவசமாக ஐம்பது வருடங்களை நெருங்க சில மாதங்கள் மீதம் இருந்த நிலையில் 1989-ம் ஆண்டு இறுதியில் தன் சேவையை நிரந்தரமாக நிறுத்திக்கொண்டது இத் திரை அரங்கம்.
1940-களில் சென்னையின் பிரபலமான தியேட்டர்களில் மூன்றே முக்கால் அணா நுழைவுச்சீட்டு என்றால் . அதே போன்ற நவீன வசதிகளைக் கொண்ட திருமலை டாக்கீஸில் இரண்டணாதான் நுழைவுச்சீட்டு வாங்கி என் தாத்தா இங்கு படங்கள் பார்த்துள்ளார்.
பி.யு.சின்னப்பாவின் 'மங்கையர்க்கரசி’, கே.பி.சுந்தரம்பாளின் 'ஒளவையார்’, எம்.ஜி.ஆரின் 'மந்திரிகுமாரி’, பொன்முடி, சபாபதி, மனோன்மணி என அக்கால வெற்றிப் படங்களை திரையிட்ட திரையரங்கம் இது.
இதன் CINEMECCANICA - VICTORIA IV-B ப்ரொஜக்டரை பிரத்யேகமாக இத்தாலியில் இருந்து வரவழைத்துள்ளார் , அதே போல வெண்மையான Perlux திரையை தெளிவான படத்திற்கு வேண்டி நிர்மானித்திருக்கிறார் உரிமையாளர் திருமலை நாயுடு.
தன் மகன்களில் ஒருவரான கிட்டப்பாவை சிறப்பான திரை அரங்கின் ஒலி அமைப்பிற்கு வேண்டி சவுண்ட் இன்ஜினீயரிங் படிக்கவைத்தாராம் இதன் உரிமையாளர் திருமலை நாயுடு அவர்கள் .
திருமலை டாக்கீஸின் இன்னொரு விசேஷம் சவுண்ட் சிஸ்டம் என என் அப்பா சொல்லி நிறைய கேட்டுள்ளேன்.
வீணை பாலசந்தரின் அந்த நாள் திரைப்படத்தை, இந்த சவுண்ட் சிஸ்டத்துக்காகவே 10 தடவைக்கு மேல் பார்த்தார்களாம் என் அப்பாவும் சித்தப்பாவும்.
மூத்த இயக்குநர் C.V.ஸ்ரீதர் மற்றும் மூத்த வசனகர்த்தா கோபு இருவரும் உரிமையாளர் மகன் கிட்டப்பாவின் வகுப்புத் தோழர்களாம்.
சித்தாமூர் கிராமத்தில் இருந்து பள்ளிக்குப் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் கிட்டப்பா வீட்டில் தங்கித்தான் இயக்குனர் ஸ்ரீதர் படித்திருக்கிறார்.
1954 ஆம் ஆண்டு இயக்குனர் C.V. ஸ்ரீதர் கதை, வசனம் எழுதிய முதல் திரைபடமான ரத்தபாசம் படத்தை தந்தையிடம் வற்புறுத்தி இங்கு திரையிட்டாராம் கிட்டப்பா.
மாட்டுக்கார வேலன்’ படம் திரையிடுகையில் அருகே செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷன் வரை வரிசை டிக்கெட் வாங்க நின்றதாம். 'திருமால் பெருமை’ படத்தை ஒவ்வொரு நாளும் திருப்பாவை பாட வைத்து பூஜை செய்த பின்னர் தான் காலைக் காட்சியை துவங்கிவைப்பார் திருமலை நாயுடு என அப்பா கதைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்,
'திரையுலகில் என்.எஸ்.கே. முதல் எம்.ஜி.ஆர். வரை பலரும் திருமலை நாயுடு அவர்களுடன் நட்பில் இருந்தார்கள்.
நடிகர் நாகேஷ் எப்போது படம் பார்க்க வந்தாலும் 'சவுண்ட் சிஸ்டம் சென்னையை தூக்கி சாப்பிடுது.
என பாராட்டுவாராம்.
மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் அவர்களும் அவரின் படங்களை இங்கே வெளியிட்டுருக்கும்போது படம் பார்க்க வருவாராம்,
எம்.ஜி.ஆர் மற்றும் இயக்குனர் ஸ்ரீதரின் எல்லாப் படங்களும் இங்கு வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஸ்ரீதர் திருமணம் திருமலை நாயுடு அவர்கள் தலைமையில்தான் நடந்துள்ளது.
தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கே, பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, முத்துராமன், கே.ஆர்.விஜயா , வஹீதா ரெஹ்மான் என்று இங்கே வராத திரைப்பிரபலங்களே இல்லை எனலாம், பாலிவுட் பிரபலமான மூத்த நடிகை வஹீதா ரெஹ்மான் 1938 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்தார், அவருடன் மூன்று சகோதரிகளும் பரதம் கற்றவர்கள், அவர் தந்தை முகமது அப்துல் ரஹ்மான் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் செங்கல்பட்டு மாவட்ட தலைமை ஆணையர் , தன் மனைவி நான்கு மகள்களை இத்திரையரங்கிற்கு அழைத்து வருவதை வாடிக்கையாகவே வைத்திருந்தாராம்.
1979 ஆண்டு திருமலை நாயுடு அவர்களின் இறப்பிற்கு பிறகு இந்த திருமலை டாக்கீஸுக்கு இறங்கு முகமாகவே இருந்து, 1989 ஆம் ஆண்டு தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது, சிறிய ஊர் செங்கல்பட்டின் பழமையை பறைசாற்ற இன்று மிச்சமிருப்பது நான்கு தான், ஒன்று செயிண்ட் ஜோசப் பள்ளி , இரண்டு திருமலை டாக்கீஸ், மூன்று மணிக்கூண்டு, நான்கு ஆர்ட் டெகோ பாணியில் அமைந்த காண்டீபன் பஸ் சர்வீஸ் (1954) அலுவலகம் .