பல்கேரியா ஒரு Balkan நாடு, கருங்கடல் கடற்கரையை உள்ளடக்கிய பலவிதமான நிலப்பரப்பு, மலைப்பாங்கான உட்புறம் ,டானூப் உள்ளிட்ட பிரம்மாண்டமான ஆறுகள் பாயும் நாடு. கிரேக்க, ஸ்லாவிக், ஒட்டோமான் மற்றும் பாரசீக கலாசாரங்களை தன்னகத்தே கொண்ட நாடு, பாரம்பரிய நடனம், இசை, உடைகள் மற்றும் கைவினைப்பொருட்களின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ள நாடு,நம்நாடு போலவே அமாவாசை ஏகாதசி போன்ற திதிகள் அனுசரிப்பர்,வேப்பமரத்தில் தொட்டில் கட்டுவர், தீ மிதிப்பர், அலகு குத்திக் கொள்வர்.
எனவே இந்த கலாசார ஒற்றுமைக்காக பல்கேரிய நாட்டுப் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், அப்படி ஆவலுடன் தேடிச் சென்று பார்த்த Women do Cry |2021| ஏமாற்றவில்லை, ரோமானிய திரைப்படமான 4 months 3weeks 2days and later போல வீச்சைக் கொண்ட மறக்க முடியாத படைப்பு.
ஒரு தாய் நாரை புகைபோக்கியிலிருந்து சுட்டு வீழ்த்தப்பட்டிருக்க, blue cross மருத்துவர்கள் அதற்கு கவனமாக அறுவை சிகிச்சை செய்வதில் இருந்து படம் துவங்குகிறது.
மற்றொரு காட்சியில் பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் தாய் குழந்தை வீறிட்டு அழுது காரியம் சாதிக்கிறது என மிகவும் அயற்சி கொள்கிறாள், கத்தியை குழந்தை முன் ஓங்கிப் பிடிக்கிறாள், குழந்தை அசராமல் அழுகிறது, தாயும் அசரவில்லை,தன் வீட்டு பால்கனியில் இருந்து குதிக்க நினைத்து சிரமமெடுத்து கைப்பிடிச்சுவரின் மீது ஏறி மறுபுறம் இறங்கி நிற்கிறாள். அறைக்குள் இப்போது குழந்தை அழுகையை நிறுத்திவிட்டது, மறுபுறம் தாய்க்கு மனமாற்றம் கால்மாற்றி குழந்தையிடம் செல்ல தெம்பில்லை, அப்படியே கைப்பிடி சுவறில் கெட்டியாக குப்பற படுத்துக் கொள்கிறாள்.
மற்றொரு பெண் லோரா மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் கட்டுமான தளத்தில் பொறியாளர்,வாராந்திர கலந்துரையாடலில் அவள் சக பொறியாளர் அவளை வார்த்தைகளால் உன்னை அப்படி முயங்கினேன் என்று கர்வம் தொனிக்க பாலியல் சீண்டல் செய்கிறான், லோரா அதற்கு பதிலடி தரும் விதமாக உன் குறியும் சுண்டெலியும் ஒன்று என நகைப்பதைப் பார்க்கிறோம்.
மற்றொரு பெண் சோன்ஞ்யாவிற்கு எச்.ஐ.வி என்று கண்டறிந்துள்ளனர், அவள் காதலன் ஒரு இருபாலின சேர்க்கையாளன், மணமாகி குழந்தை இருப்பதை மறைத்து இவளை ஏமாற்றி நோய் தந்துள்ளான்,எச்.ஐ.விக்கு சிகிச்சை நிரந்த மருந்துகள் எடுத்துக் கொள்ள மிகவும் தயங்குகிறாள்,தன் களங்கத்தை உள்ளது உள்ளபடி சமாளிக்க நினைக்கிறாள்,ஆனால் பல்கேரியா போன்ற சமூகத்தில் அத்தனை எளிதில்லை, பிறப்புறுப்பு ரணம் கட்டி நீர்வடிதலுக்கு gynaecologist ஆண் மருத்துவரிடம் சென்று herpes என்று சொன்னவள், அவர் சோதிக்க கையுறை மாட்டிய பின் தனக்கு எச்.ஐ.வி என்கிறாள், கலக்கமடைந்து களேபரம் செய்கிறார் மருத்துவர், அவளை இதற்கென இருக்கும் தொண்டு நிறுவனங்கள் தரும் சிகிச்சைக்கு செல் என்கிறார், இவளை பரிசோதித்தால் தன் மருத்துவ உபகரணங்கள் ஒட்டுவாரொட்டி கிருமியை ஆட்கொள்ளும் அது தனக்கு கெட்டபெயர் தேடித் தரும், என்னால் முடியாது என விரட்டுகிறார்,
இத்தனை அவமானம் நடந்தும் சோன்ஞ்யா மருத்துவ சிகிச்சை துவங்குவதில்லை, தன் சொந்த ஊரில் இருக்கும் மகிமை பொருந்திய நோய் தீர்க்கும் புனித ஸ்தலவிருட்ச மரத்துக்கு தன் சகோதரி லோராவுடன் சென்றவள், அந்த மரத்தின் கிளையில் தன் panty ஐ கட்டித் தொங்க விடும் காட்சி உள்ளது, உலக நாடுகள் சில நாம் நினைப்பதைவிட பிற்போக்காக இருக்கிறது என உணர்த்துகிறது.
நமக்கு கடும் அதிர்ச்சியாக இருக்கிறது.
இப்பெண்களின் தாய் தொலைக்காட்சியில் தினசரி ராசிபலனில் தனக்கும் வீட்டாருக்கும் ராசிபலன் பார்க்கிறாள்.
பெண்கள் நிறைந்த சமகால பல்கேரிய குடும்பம் ஒன்றின் பலமும் பலவீனமும் , அபத்தங்களும் வன்முறையும், பாலின-சமத்துவ எதிர்ப்பு போராட்டங்களின் பின்னணியில் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ள படைப்பு இது.
பல்கேரியாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது,உலகசினிமா ரசிகர்கள், மாணவர்கள் தவற விடாதீர்கள்.
#உலகசினிமா,#பல்கேரியா