மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தின கதை போன்ற தீர்ப்பு இது, கோயில் என்பது ஒவ்வொருவருக்கும் மலரும் நினைவுகளைத் தருவது, எனக்கு மீனாட்சி அம்மன் கோயில் ஆடிவீதி, தெப்பகுளம், கிளி மண்டபம் அத்தனை மனமகிழ்ச்சியைத் தரும் ஆனால் கடந்த பனிரெண்டு வருடங்களாக இங்கு நான் படமெடுத்ததில்லை.
காரணம் கோயிலுக்குள் நுழையும் முன் நான்கு கோபுரவாயிலிலும் செல்போனை ஒப்படைத்து விட்டுப் போவது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பனிரெண்டு வருடங்களாக அமலில் இருக்கிறது,பெரிய பிரயத்தனமான பணி இது,வரிசையில் நின்று தர வேண்டும்,வரிசையில் நின்று பெற வேண்டும், இதனால் கோயிலின் உள்ளே என்ன வண்டவாளம் நடந்தாலும் வெளியே வராது, மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுர வாசல் வீர வசந்தராயர் மண்டபம் தீ விபத்து நடந்த பின் கோயிலில் சேதமுற்ற பகுதிகளின் தற்கால நிலைமை என்னவென்று யாருக்காவது இதுவரை தெரியுமா? தெரியாது, காரணம் இந்த மொபைல் தடை தான்.
உதாரணம் எந்த புராதான சிற்பங்கள், புராதான தூண்கள்,உத்திரங்கள் , கற்கூரைகள் என எதையும் மராமத்து என்ற பெயரில் புதிய கட்டுமானம் செய்து கோயில் நிர்வாகம் சடுதியில் மாற்றினாலும் கூட வெளியே தெரியாது, உள்ளே ஊழியர்கள் லஞ்சம் வாங்கினாலோ பக்தர்களிடம் மரியாதை குறைவாக பேசினாலோ எதுவும் வெளியே வராது, அதற்கு தான் இந்த தீர்ப்பு வழி வகுக்கும்.
கோயிலுக்குள் பக்தர்களிடம் பறிமுதல் செய்ய வேண்டிய ஒன்று உண்டு என்றால் பீடி சிகரெட் குட்கா கைனி போன்ற இன்னபிற போதை வஸ்துக்கள் தான், உள்ளே சென்று குறும்படம் எடுப்பவர்கள், ரீல்ஸ் எடுப்பவர்களை களையெடுங்கள், ஆனால் கேமரா மொபைலை அனுமதியுங்கள் அதுவே நமது புராதான சின்னங்களை உலகம் முழுக்க சமூக ஊடகங்களில் படங்களைப் பகிர்வதன் மூலம் கொண்டு சேர்க்கும் வல்லமை படைத்தது,ஏற்கனவே வரலாறு பாடத்துக்கு மதிப்பில்லை, கல்லூரிகளில் சீந்துவாரில்லை, இப்படி வரலாற்று சுவடுகளை படமெடுக்க தடை விதிப்பதன் மூலம் புதிய தலைமுறைக்கு வரலாற்று மீதான ஆர்வம் மடைமாற்றாமல் போகிற அபாயம் உண்டு,பல மாணவர்களுக்கு வரலாற்று சுவடுகளின் பெருமைகளை எழுத்தில் எழுதினால் புரியாது, படம் காட்டி சுட்டினால் தான் புரியும்.