இது பெரிய பதிவு,கருமாத்தூர் மூணுசாமிக் கோயிலில் வீற்றிருக்கும் நாட்டார் தெய்வங்களைப் போற்றும் திரைப்பாடல்கள் மற்றும் விளக்கத்தின் தொகுப்பு.
விருமாண்டி திரைப்படத்தின் மையக்கருவை பார்வையாளருக்கு கடத்தும் ஏழு நிமிடங்கள் நீளும் அழகிய நாட்டார் பாடல் ஒன்றை இசைஞானி மிக அற்புதமாக உருவாக்கித் தந்திருப்பார், இப்பாடலை கவிஞர் முத்துலிங்கம் எழுதினார், இப்பாடலை பெரிய கருப்பத்தேவருடன் இணைந்து மேரி, சுகுமார் ,திருவுடையான்,கரிசல் கருணாநிதி குழுவினர் பாடினார்கள், இப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் மூணுசாமி கோயிலில் வீற்றிருக்கும் நாட்டார் தெய்வங்களின் தல வரலாற்றினை நயம்பட உரைப்பவை.
கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்
காளியம்மன் போல வந்தாள் பேச்சியம்மா (கருமாத்தூர்)
சைவசமையல் படையல் வைச்சு
சருவசட்டியில் பொங்கல் வைப்பா
சாமிக்கெல்லாம் பூச வைப்பா
சங்கெடுத்து ஊதி நிப்பா (கருமாத்தூர்)
சங்குசத்தம் அந்த கொக்குளத்தில் உள்ள
பேய்க்காமன் காதில் கேட்டது… கேட்டது… கேட்டது…
பொங்கலோடு பழங்களும் சைவபடையல் வைச்சு
சாமிக்கு யார் அங்கு படைப்பது?
சைவவாடையது கொஞ்சமும் சகிக்கவில்ல
தாக்கி முகம் சுழிக்க வைக்குது
என்று செங்கண் துடிதுடிக்க அங்கம் பளபளக்க
பொங்கினானே பேய்க்காமனே!
மாட்டுக்கொடலெடுத்து மாலையாக போட்டுதான்
பேச்சியம்மா இடத்துக்கவன் வந்தானே (மாட்டுக்கொடலெடுத்து)
நானாளும் பகுதியே என்னென்னவோ சத்தம்தான்
நீயெழுப்பும் சத்தம் எல்லாம் சுத்தம்தான்
சத்தத்தாலே நேத்துபூரா தூங்கல
உங்க சங்கு சத்தம் கொட்டு சத்தம் தாங்கல
ஏழுநாளில் இங்கிருந்து கிளம்பனும்
அட இல்லாவிட்டால் நீங்களெல்லாம் புலம்பனும்
அச்சமூட்டி எல்லாரையும் மிரட்டுனான்
பொருளை அடிச்சு நொறுக்கி ஆவேசமா விரட்டுனான்
விரட்டுனான் ஐயயோ விரட்டுனான்
விரட்டுனான் ஐயயோ விரட்டுனான்
அன்னக்கொடுச்சி அழகுமயில் பேச்சியம்மா
தன்னந்தனியே வாடுரவ
கண்ணான கழுவநாதன் கண்டுமனம் கலங்கி நின்னு
அவ உள்ளங்கை ரேகையை ஊடுருவி பார்த்துட்டான்
புறங்கை ரேகையை புரட்டி புரட்டி பார்த்துட்டான்
உன்னையை காப்பாற்ற ஒரேஒரு ஆளைவிட்டா
உலகத்திலே யாருமில்லை… ஆமாம்
ஒட்டிநிக்கும் துன்பமெல்லாம்
ஒட்டடையா ஓட்டிடுவான் ஒருத்தனாக.. ஆமாம்
அனாதைக்கு ஆதரவு தருவாண்டி
அவன்பேரு நான்சொன்னேன் விருமாண்டி
விருமாண்டிய வேண்டிவர தான் அந்த பேச்சியம்மா புறப்புட்டாளே
வனந்தரம் காடு கடந்து அந்த வண்ணமயில் புறப்புட்டாளே
எறும்பேற முடியாத எட்டு சுத்து கோட்டைக்குள்ளே
பாம்பேற முடியாத பத்து சுத்து கோட்டைக்குள்ளே
ஆதரவு இல்லாத ஆறாம்பிடி கோட்டைக்குள்ளே
அண்ணணையே சந்திக்க அழகியவள் போனாளே!
விவரம் கோட்டு விருமாண்டி
வீரம் கொண்டு பொங்கி எழுந்தானே!
கன்னிப்பொண்ணு கதை கேட்டு
கண்ணுசெவக்க எழுந்தானே!
பெத்தபுள்ள துயரம் கேட்டு
பெத்தவங்க துடிப்பது போல்
பெரும்புழுதி புயலயடிக்க பேய்க்காமனும் இருக்குமிடம்
பிரமாண்டம் கிடுகிடுக்க விருமாண்டி வந்தானே…வந்தானே…வந்தானே…
வெண்பொங்கல் தேங்காப்பழம் விபூதி – அதை
வெறுப்பதென்ன அர்த்தம்கெட்ட கபோதி
இது பேச்சியம்மா குடியிருக்கும் திடலுடா
எதிர்த்து பேசினாக்க கிழிந்துபோகும் குடலுடா
மாட்டுகுடலில் மாலைபோடும் பராரி
உன்முதுகில் ஏறி செய்யப்போறேன் சவாரி… சவாரி.. சவாரி
இப்படி விருமாண்டி சொன்னதும் இரண்டு பேருக்கும் கடுமையா சண்டை நடந்துச்சு.அப்ப பூமியெல்லாம் நடுங்குச்சு மலையெல்லாம் உடைஞ்சுச்சு. இதைப்பார்த்த சிலபேரு வீணா ஏதுக்கையா சண்டை போடரிங்க?, சமாதனமா பேசிதீர்த்துக்கலாம் அப்படின்னு சொன்னாங்க. அவங்களும் சம்மதிச்சாங்க. அதுக்கப்புறம் பஞ்சாயத்தார் தீர்ப்பு சொன்னாங்க.
என்ன சொன்னாங்க.
தொட்டப்பநாய்க்கனூரிலையும், மதுரை மொட்ட கோபுரம் பக்கத்திலேயேயும் கொடியொன்னு நட்டுவைப்போம், உங்க ரெண்டு பேருலையும் யார் முதலபோய் அந்த கொடியை தூக்கிட்டு வாராகளோ, அவுங்களுக்கு அந்த எல்லை சொந்தமுன்னு பஞ்சாயத்தார் தீர்ப்பு சொல்ல பேய்க்காமன் யோசிச்சான். யோசிச்சு சதியொன்னு பண்ணுனான். விருமாண்டி கையில நொண்டி குதிரையொன்னு கொடுத்து, அவன் போனா எங்கடா கொடிய தூக்கிக்கிட்டு வரப்போரான்னு நினைச்சான்.
ஆகா,..
மொட்டக்கோபுரந் தொட புறப்புட்டான் பேய்க்காமனும்
தொட்டப்பநாய்க்கனூரை தொட்டுட விருமன் போனான் (மொட்ட)
ஏய்க்க நினைச்ச அந்த
பேய்க்காமன் எல்லையையும்
சேர்த்தே அளந்து வந்து
ஜெயிச்சானே விருமாண்டியும்
ஜெயிச்சானே விருமாண்டியும்!
அண்ணே திரும்பிபோனா
இங்கே இவன் சும்மா இருப்பானா?
பொண்ணுக்கு தொல்ல கொடுக்கும்
எவனும் இங்கே நல்லாருப்பானா?
என்ன நானும் செய்யப்போறேன்?
எனக்கு ஒன்னும் தெரியவில்லையே?
அட அண்ணன்காரன் விருமன் போனா
வேறு ஏதும் வழியுமில்லையே!!!
அதனால என்ன பண்ணறதுன்னு யோசிச்சு ஒரு தந்திரம் பண்ணுனா பேச்சியம்மா.
என்ன செஞ்சா?.
தான் விரலுள்ள போட்டிருந்த மோதிரத்தை கிணத்துக்குள்ள போட்டுட்டு, அண்ணே அண்ணே மோதிரம் விழுந்துடுச்சு எடுத்துக்கொடுங்கன்னு அண்ணேன்னு சொன்னா.
தங்கச்சி வேண்டுதல நிறைவேத்தி வைக்கிற அண்ணன், தங்கச்சிக்காக கிணத்துல குதிச்சு மோதிரத்த எடுக்கையில, கிணத்துமேல வைச்சிருந்த கல்லை வைச்சுமூடி பேச்சியம்மா விருமாண்டிய கிணத்துக்குள்ளேயே சிறை வைச்சுப்புட்டா.
என்ன தங்கச்சி, உனக்கு உதவி பண்ண வந்த எனக்கு இதுதான் நீ காட்டுற நன்றியா?ன்னு விருமாண்டி கேட்க, பேச்சியம்மா யோசிச்சு தினம் தினம் அண்ணனுக்கு சூலி பொண்ணும், சூலி மாடும் கொடுக்க நம்மலால முடியுமா. கொடுத்தா உலகம்தான் இத தாங்குமா அப்படின்னு நெனச்சு, அண்ணன்கிட்ட சொன்னா, அண்ணே நீ கேட்ட படி உனக்கு பூசை பண்ண முடியாது. ஆனா நாங்க என்ன பண்ணுவோம்னா,.
ஆடிக்கடைசி வெள்ளி
ஒனக்கொரு பூசை வப்போம்
ஆகாசப் பொங்கல் வச்சு
அப்போ படைய வப்போம்
ஆடிக்கடைசி வெள்ளி
ஒனக்கொரு பூசை வப்போம்
ஆகாசப் பூசை வச்சு
அப்போ படைய வப்போம்
அதிலே நீ கேட்டதெல்லாம்
ஆமாமா செஞ்சு வைப்போம்.
அதுக்காக எங்களையே எப்போவுமே காத்து இருந்து
இங்கே நீ இருக்க வேனும் – எங்கும்
பொங்கும் மங்கலம் தங்க வேனும்.
சாமி இங்கே நீ இருக்க வேனும் – எங்கும்
பொங்கும் மங்கலம் தங்க வேனும்.
திரைப்படப் பாடல் முடிந்தது, இனி இந்த நிஜ நாட்டார் தெய்வங்களின் தத்துவ விளக்கத்தை பார்ப்போம்.
மதுரையில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ளது கருமாத்தூர். இந்த ஆலயத்தின் தோற்றம் இந்துக்கள் மும்மூர்த்தி தத்துவத்தை உரைக்கிறது.
கலி காலத்தில் இமய மலையில் இருந்த மாயன் (விஷ்ணு), விருமாண்டி (பிரும்மா ) , சிவன் மற்றும் பேச்சி (பார்வதி ) போன்ற அனைவரும் தென் இந்தியப் பகுதிக்கு வந்து தங்க முடிவு செய்தனர்.
ஆனால் அப்போது மாயன் தவத்தில் இருந்ததினால் மற்றவர்களை முதலில் போகுமாறும் தான் பின்னர் வருவதாகவும் கூறினார். அகவே மற்றவர்கள் மதுரையில் இருந்த வைகை நதிக் கரையை அடைந்து காச்சிரயப்பு என்ற இடத்துக்கு சென்றார்கள். ஆனால் அந்த இடம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
விருமாண்டி மலையாளக்கரைக்கு சென்று தனக்கு உகந்த இடத்தை தேட எண்ணினார். பேச்சிக்கு பொறுமை இல்லை. ஆகவே அருகில் இருந்த நாகமலை என்ற இடத்துக்குப் போய் தன்னை ஒரு பெண் மந்திரவாதி போல மாற்றிக் கொண்டு அங்கிருந்தவர்களிடம் தன்னை எங்காவது நல்ல இடத்தில் விட்டு விடுமாறு கேட்டாள்.
அவள் ஒரு தங்கத்திலான பல்லக்கையும் மந்திரத்தில் வரவழைத்தாள். ஆகவே அவளை சுமந்து கொண்டு சென்ற கிராமத்தினர் அவளை கருமாத்தூர் காட்டில் விட்டு விட அதுவே தனக்கு தங்குவதற்கு சிறந்த இடம் என முடிவு செய்தாள்.
அன்று இரவு அவள் மணி அடித்து பூஜை செய்து கொண்டு இருந்தபோது அந்த காட்டில் வசித்து வந்த பேய்க்காமன் என்ற அசைவப்பிரியம் கொண்ட ஆண்தேவதை வந்து அந்த இடம் தனக்கு சொந்தமானது எனவும் அங்கிருந்து போய் விடுமாறும் அவளிடம் கூறியது.
அவளை பயமுறுத்த தனது கழுத்தில் தான் கொன்ற பிராணிகளின் குடல்களைப் பிடுங்கி மாலையாகப் போட்டுக் கொண்டு வந்தது. ஆனால் அவளோ அவற்றை பூ மாலைகளாக மாற்றி விட்டாலும் மனதில் இருந்த பயம் போகவில்லை.
அவள் தனக்கு துணைக்கு சிவனை அழைத்தாள். சிவன் ஒரு சைவம் என்பதினால் அவரால் அதை ஒன்றும் செய்ய முடியவில்லை. அது போல அவள் அழைத்த இமய மலையில் தவம் புரிந்து கொண்டு இருந்த மாயனாலும் வேறு சில காரணத்தினால் வர முடியவில்லை. ஆகவே அவள் விருமாண்டியை அழைத்தாள்.
அவரோ தான் மலையாளக்கரையில் சுகமாக இருப்பதாகவும் ஆகவே அங்கு வர முடியாது எனவும் கூற அவளோ அவர் அங்கு வந்து தன்னை பாதுகாத்தால் அவருக்கு ஆறு கால பூஜைகளை செய்ய ஏற்பாடு செய்வதாகக் கூற அவரும் அதனால் மனம் மகிழ்ந்து அங்கு வந்தார்.
வந்தவர் பேய்க்காமனுடன் சண்டையிட்டார். சண்டையில் அதன் குதிரையின் ஒரு கால் ஒடிந்துவிட்டது. அந்த சண்டைக் கண்டு கவலையுற்ற முருகர், மீனாக்ஷி மற்றும் சொக்கநாதர் வந்து அந்த சண்டையை நிறுத்தினார்கள்.
முருகர் அவர்களிடம் கால் ஒடிந்த பேய்க்காமனின் குதிரை மீது விருமாண்டி ஏறிக்கொண்டு எத்தனை தூரம் போய் விட்டு வருகின்றாரோ அத்தனைஇடமும் அவருக்கு சொந்தம் ஆகும் எனவும், அது போல பேய்க் காமனும் விருமாண்டியும் குதிரை மீது ஏறிக்கொண்டு எத்தனை தூரம் போய்விட்டு வருகின்றாரோ அந்த இடங்கள் அவருக்கு சொந்தம் எனவும் கூறினார்.
விருமாண்டி ஏறிய நொண்டிக் குதிரையினால் அதிக இடங்கள் போக முடியவில்லை, ஆனால்
பேய்க்காமனோ பல இடங்களுக்கு சென்று திரும்பினார். (இந்த குதிரை பந்தயத்தில் நாட்டார் கதையில் இரண்டு விதமான கருத்துகள் உள்ளது, படத்தில் வரும் பாடலில் விருமாண்டி ஜெயித்தது போல முடிவை எடுத்துக் கொண்டுள்ளனர்.) அதனால் கோபமுற்ற பேச்சி அம்மன் இனி அந்த பூமியில் முருகரை எவராவாது வழிபட்டால் அவர்கள் குடும்பம் நாசமாகும் என சாபமிட்டாள்.
ஆகவே கருமாத்தூரில் இன்று வரை எவரும் முருகருக்கு பூஜைகள் செய்வதே இல்லை. இந்த மூணு சாமி கோவிலில் விநாயகருக்கு சந்நிதி உள்ளது, ஆனால் முருகருக்கு சந்நிதி இல்லை,
விருமாண்டி அனைவரையும் விட பலசாலி என்பதினால் அவர் அங்கு இருந்தால் தனக்கு பாதுகாப்பு எனக் கருதி அவரை பேச்சியம்மன் ஒரு சங்கிலியால் கட்டி ஒரு பொந்துக்குள் தள்ளி மூடிவிட்டாள் . வருடத்துக்கு ஒருமுறை ஆடிக் கடைசி வெள்ளி அன்று அவருக்கு விசேஷமான விழா எடுக்கப்படும் என்றாள்.
மதுரை மாவட்டத்தின் உள்ளிருக்கும் கருமாத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் வழிபடும் மூணு சாமிகளில் சிவன் மட்டும் சைவமாம், அதனால் தான் அவருக்கு தனிக்கோயில் தனிப்படையல், சைவம் என்றால் புலால் உண்ணாமை என்ற உணவுக் குறீயீடும் வந்தது.
சிவன் சைவம் என்பதினால் கீழ் குயில் குடி என்ற இடத்தில் அவருக்கு ஆலயமும், மற்ற மூன்று கடவுளருக்கும் ( பேச்சி, விருமாண்டி, மாயன்) கருமாத்தூரில் ஆலயமும் எழுப்பப்பட்டது.
ஆடி கடைசி வெள்ளிக் கிழமை அன்று விருமாண்டிக்கு கருப்பு நிற ஆடு பலி தரப்படுகின்றது.(படத்தில் வெந்நிற கர்ப்பிணி ஆட்டை காட்டுகின்றனர்), வெட்டப்பட்ட அதன் தலையை பூமிக்குள் புதைத்து விடுகின்றனர்.
அந்த ஆட்டு இறைச்சியை வைத்து பொங்கல் செய்து அவருக்கு படைக்கின்றனர். அப்போது அந்த ஆலய பூசாரி அதில் இருந்து சிறு
உருண்டை பிடித்து மூன்றுமுறை நாலாபுறமும் ஆகாயத்தில் வீசுவார். அது கீழே விழுவதே இல்லையாம்.
விருமாண்டி அடைபட்டு கிடப்பதாக கூறப்படும் இடத்தின் மீது பெரிய பாறையினால் செய்யப்பட்ட விளக்கு கம்பம் வைக்கப்பட்டு உள்ளது. விருமாண்டிக்கு பூஜை செய்து வணங்கும்போது அந்தக் கல் பாறை ஆடுமாம்.
அன்று இரவு ஒரு கர்ப்பிணி ஆட்டை பேச்சியம்மனுக்கு பலி தருகின்றனர். அந்த விழா நடைபெறுவதற்கு மூன்று நாட்கள் முன்பே அந்த ஊரில் உள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் ஊரை விட்டுச் சென்று வெளியூரில் தங்குவார்களாம்.
பேச்சியம்மனை மாயக்காரப் பேச்சி எனவும் தில்லைவனப் பேச்சி எனவும் அழைகின்றனர். ஒரு முறை ஒருவன் கொல்லப்பட்டுவிட அவனுடைய மகன் அவளிடம் சென்று கொன்றவனை தண்டிக்குமாறுக் கேட்க, அவள் ஒரு கிழவி உருவில் வழக்கு மன்றம்வரை சென்று சாட்சி கூறி கொன்றவனுக்கு தண்டனை வாங்கித் தந்தாளாம். ஆகவே அவளை உயர் நீதி மன்றப் பேச்சி எனவும் கூறுகின்றார்கள் பக்தர்கள்.
விருமாண்டிக்கு ஆடிக் கடைசி வெள்ளி அன்று படையல் இடும் வழக்கத்தை அற்புதமாக இசைஞானி பாடலில் புனைந்துள்ளார், இப்பாடலை எழுதியதும் கவிஞர் முத்துலிங்கம் தான்,பாடலை பாடியது இசைஞானி, கமல்ஹாசன், கார்த்திக் ராஜா, சுரேந்தர்,திப்பு மற்றும் குழுவினர் பாடினர்.
"பாண்டி மலையாளம்
காசி ராமேஸ்வரம் அடக்கி
ஆளும் ஆண்டியப்பா கழுவநாதன்
தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன்
உனக்குள்ள அடக்கமப்பா"
ஆடி வெள்ளி பூத்திருச்சு
உச்சி பூஜை காத்திருக்கு
ஏத்துக்கிட வெளிய வா
வெளிய வா வெளிய வா
விரு விரு மாண்டி
விருமாண்டி விரு விரு
மாண்டி விருமாண்டி விரு
விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி
அந்த காண்டாமணி
ஓசை கேட்டுருச்சி எங்க
கலியுகத்து சாமி வெளிய
வா
எங்க வாக்குப்படி
ஆடி வெள்ளியில பூசை
ஏத்துக் கொள்ள சாமி
வெளிய வா
பேய்காமன அடக்கி
வச்ச விருமாண்டிய
பேச்சியம்மா கூப்பிடுறா
சாதி சனம் படையல் வச்சு
காத்திருக்கு சத்தியத்தை
காத்து போடு
அந்த காண்டாமணி
ஓசை கேட்டுருச்சி எங்க
கலியுகத்து சாமி வெளிய
வா
விரு விரு மாண்டி
விருமாண்டி விரு விரு
மாண்டி விருமாண்டி
எங்க வாக்குப்படி
ஆடி வெள்ளியில பூசை
ஏத்துக் கொள்ள சாமி
வெளிய வா
உதவ கரம் கொடுத்த
சாமியே உன்னை தான்
ஒடுக்கி அடைச்சது பாவம்
சண்டப்பன் சண்டகாமன்
மறுபடி எழுந்தா தஞ்சமா
நாங்க எங்க போவோம்
திக்கத்த ஏழைக்கிங்கே
உன்னை விட்டா கஷ்டத்தில்
கை கொடுக்க யார் இருக்கா
பிள்ள செஞ்ச துன்பம் எல்லாம்
உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா
குறை ஏதும் இல்லாத
சாமி எங்க தெய்வமுன்னு
எங்களுக்கு காமி
அந்த காண்டாமணி
ஓசை கேட்டுருச்சி எங்க
கலியுகத்து சாமி வெளிய
வா
எங்க வாக்குப்படி
ஆடி வெள்ளியில பூசை
ஏத்துக் கொள்ள சாமி
வெளிய வா
பேய்காமன அடக்கி
வச்ச விருமாண்டிய
பேச்சியம்மா கூப்பிடுறா
சாதி சனம் படையல் வச்சு
காத்திருக்கு சத்தியத்தை
காத்து போடு
அந்த காண்டாமணி
ஓசை கேட்டுருச்சி எங்க
கலியுகத்து சாமி வெளிய
வா
#17yearsofvirumaandi,#விருமாண்டி,#கமல்ஹாசன்,#இசைஞானி,#பசுபதி,#நெப்போலியன்,#நாசர்,#அபிராமி,#sn_லட்சுமி,#ரோஹினி,#சண்முகராஜன்,#கு_ஞானசம்பந்தம், ,#பாலாசிங்,#oak_சுந்தர்,#காந்திமதி,#பிரமிட்_நடராஜன்,#பெரியகருப்பத்தேவர்,#சுஜாதா_சிவகுமார்,#ராஜேஷ்,#DOP_கேஷவ்_பிரகாஷ்,#art_பிரபாகர்,#editing_ராம்_சுதர்ஷன்,#கவிஞர்_முத்துலிங்கம்